சிறுதானிய உற்பத்தியை பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு




சென்னை: தமிழக சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண்மை பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * கடந்த 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. * அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 26 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். * 2,500 கிராமங்களுக்கு 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். * 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.


* உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும். * சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ. 82 கோடி நிதி ஒதுக்கப்படும். * கம்பு, கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்யப்படும். * ரேஷன் கடைகளில் கம்பு உள்ளிட்ட சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். * நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு மட்டும் ரூ.5 லட்சம் பரிசினை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அனைத்துப் பயிர்களுமே அரவணைக்கத் தக்கவை என்பதை அடிப்படையாக கொண்டு, நெல்லுக்கு வழங்கி வந்ததை, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணை வித்துகள் போன்றவற்றிற்கும் வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும்.


அதே போல உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப்பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும். * பாரம்பரிய நெல் விதைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். * பட்ஜெட்டில் வேளாண் துறை வளர்ச்சிக்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான ரூ.5 லட்சம் பரிசு தொகை சிறுதானிய விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. * ஆர்கானிக் எனப்படும் அங்கக வேளாண் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.


* 2020-ஐ விட 2021-22-ம் ஆண்டில் வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. * நெல்லுக்கு பிறகு பயிர் சாகுபடி-மானியம் ரூ.24 கோடி வழங்கப்படும். * ஆதிதிராவிட சிறு-குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * பழங்குடி சிறு-குறு விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. * வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * வரலாறு காணாத அளவில் நேரடி கொள்முதல் மிக அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. * உழவர் சந்தை விலைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.


* கடந்த ஆண்டு சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற 77 லட்சம் உயர்ரக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டுள்ளன. * 2023 பருவம் தவறி கடந்த ஜனவரி மாதத்தில் கன மழை பெய்ததால், பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 72 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியமாக ரூ.33 கோடியே 60 லட்சம் மானிய மாநில பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. * 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. * அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. * மின்சக்தி அல்லது சூரிய சக்தி மூலம் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கப்படும். * ஊரக வளர்ச்சி மூலம் தடுப்பணைகள் வயலுக்கு செல்லும் சாலைகள் பல்வேறு பணிகள் மேம்படுத்தப்படும். * சிறுதானியங்களை மதிப்பு கூட்டு விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நிதி வழங்கப்படும். * மக்களிடையே சிறு தானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழாக்கள் இயக்கத்தின் மூலம் ஏற்படுத்தப்படும். வரும் ஆண்டில் ஒன்றிய மாநில அரசுகள் உதவியுடன் ரூ.22 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. * அகில இந்திய பாரம்பரிய நெல்களை பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 10 விவசாயிகளுக்கு வரும் ஆண்டு முதல் 3 லட்சம் ரூபாய் என 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும். * நீலகிரியில் அங்கக வேளாண்மைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * வட்டார அளவில் விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும். * 37 மாவட்டங்களில் 385 வேளாண் வட்டார விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும். *உழவர் நலன் சார்ந்த வேளாண் மின்னணு உதவி மையம் அமைக்கப்படும். * எண்ணை வித்துக்களின் உற்பத்தியை பெருக்க ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * தேசிய அளவில் தமிழகம் தென்னை வளர்ச்சியில் முதலிடம் பெற இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * கால்நடை வளர்ப்புக்கு வட்டியில்லா கடன் தர ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * நூற்பாலைகளுக்கான பருத்தி உற்பத்திக்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * பயிர் சாகுபடி சந்தேகங்களை கேட்க வட்டாரத்திற்கு ஒரு விஞ்ஞானி நியமிக்கப்படுவார். * 3, 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம். * வேளாண் மின்னணு உதவி மையம் நிறுவப்படும். * கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும். * ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் 300 குடும்பங்களுக்கு பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்படும். * சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்காவை அழகுப்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மையங்கள் (இ.சேவை) ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படும். * தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர், சாகுபடி செய்யும் விசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களான வங்கி கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள் பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து கணினிமயமாக்கி புதிய இணைய தளமான (GRAINS) அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் கிடைக்கும். * ரூ.50 ஆயிரம் மானியத்தில் 10 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கு வரும் நிதியாண்டில் ரூ. 50 கோடி ஒதுக்கப்படும். * பயிறு வகைகளில் பரப்பளவையும் உற்பத்தியையும் அதிகரித்திட பயிறு பெருக்கு திட்டம் வரும் நிதியாண்டில் ரூ. 30 கோடியில் ஒன்றிய, மாநில அரசு ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். * துவரையை நடவு முறையில் சாகுபடி செய்ய ரூ.18 கோடி ஒதுக்கப்படும். * நிலக்கடலை, எள், சோயா, மொச்சை போன்ற பயிர்களை விரிவாக்கம் செய்திட ரூ. 33 கோடி நிதி ஒதுக்கீட செய்யப்படும். * பருத்தி உற்பத்தியை 4 லட்சத்து 52 ஆயிரம் பேல்களாக உயர்த்த ரூ.12 கோடி நிதியில் பருத்தி இயக்கம் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும். * பயிர் காப்பீடு திட்டத்திற்கு அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்படும். * கரும்பு விவசாயிகளுக்கு ஆதாய விலையான டன் ஒன்றுக்கு ரூ.2,821 மேல் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.1,950 வழங்கப்படும். இதற்காக ரூ.253 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா மேற்கொள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.