தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும்:
துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார். இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் 3 நாள்கள் சுற்றுப் பயணமாக தனி விமானம் மூலம் கடந்த ஜூன் 15-ஆம் தேதி புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அவரை துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதல்வர் என்.ரங்கசாமி, அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர். புதுச்சேரி கடற்கரை பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் விழாவில் பங்கேற்பு
இந்த நிலையில், சுற்றுப்பயணத்தின் 3-ஆம் நாளான இன்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தாத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை
30 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை, இளைஞர்களை முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், அவர்களின் திறமை, பன்முகத்தன்மை ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும், அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிப்பதன் மூலமும் அதிகாரம் அளிக்கிறது.
மொழிகளின் அடிப்படையில் எந்த நாடும் வளமாக இல்லை
இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை உள்ளடக்கியதன் விளக்கத்தை எடுத்துரைத்த அவர் மொழிகளால் நாம் எவ்வாறு பிரிக்கப்பட முடியும்? உலகில் வேறு எந்த நாடும் இந்தியாவை போல மொழிகளின் அடிப்படையில் வளமாக இல்லை. மொழியியல் பெருமை என்பது பிளவுபடுத்தும் சக்தியாக அல்ல, ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். சனாதன தர்மம் ஒரு பொதுவான, உன்னதமான நோக்கத்துக்காக ஒன்றுபட கற்றுக்கொடுக்கிறது. சிறுவர், சிறுமிகளின் எதிர்காலத்துக்காக சிந்தித்து, எழுச்சி பெற்று, முன்னேறுவோம்.
இழந்த உரிமைகளை வலுவாக மீட்டெடுக்கப்படுகின்றன
இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது இழந்த உரிமைகள் வலுவான உறுதியுடன் மீண்டும் மீட்டெடுக்கப்படுகின்றன. இந்தியாவின் பண்டைய பாரம்பரியமான முழுமையான கற்றலைப் பின்பற்றி, விமர்சன சிந்தனை, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் பல்கலைக்கழகங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பில்லியன் கணக்கான அறக்கட்டளை நிதியைக் கொண்ட உலகளாவிய பல்கலைக்கழகங்களைப் போல புதுச்சேரி பல்கலைக்கழகமும் ஒரு முன்னாள் மாணவர் அறக்கட்டளை நிதியைத் தொடங்க வேண்டும். கல்வியின் வணிக மயமாக்கல் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த ஜகதீப் தன்கர், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உயர்த்துவதை நோக்கி தங்கள் பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளை மறுசீரமைக்குமாறு பெருநிறுவனத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
கல்வி வணிகம் ஆகக்கூடாது
பண்பு இல்லாத அறிவு முழுமையடையாது. கல்வியை விற்பனை செய்யக்கூடாது. அது ஒரு சேவையாக இருக்க வேண்டும். கல்வியும், சுகாதாரமும் ஒரு காலத்தில் வசதி படைத்த சமூகத்துக்கு திருப்பி கொடுக்கும் வழிமுறைகளாக இருந்தன. இந்தியா எழுச்சி பெறுகிறது. உலகம் நம்மைப் பார்க்கிறது. குறுகிய அரசியலால் நமது தருணத்தை குறைமதிப்புக்கு உள்படுத்த வேண்டாம் என்று தெரிவித்தார்