தமிழ்நாடு அரசின்
புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது!பண்ருட்டி தி.வேல்முருகன்
புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது!
மோடி அரசின் இத்தகைய மோசடி கல்விக்கொள்கைக்கு எதிராகவும், மாற்றாகவும், தமிழ்நாடு அரசு மாநில கல்விக்கொள்கையை 08.08.2025 அன்று வெளியிட்டிருக்கிறது.
அதில், பள்ளிக்கல்வியில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும். தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக்கல்வியை வழங்குதல் அவசியம். தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கதக்கது.
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை முறையில், 3, 5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கக் கூடாது என்றும் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் என்றும் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
நடப்பு கல்வியாண்டு முதலே 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவது என்றும், இனி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்,எம்.ஜி.ஆர்., அண்ணா, தமிழ் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும். தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும். தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.
மேலும், சாதி, மதம், பாலினம், இடம் மற்றும் திறமை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள், மூன்றாம் வகுப்பு முடிவதற்குள் அனைத்து மாணவர்களும் வாசிக்கவும், அடிப்படை கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் திறன் பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை, மனப்பாடம் செய்வதை குறைத்து, மாணவர்களின் அனுபவம், செயல்பாடு மற்றும் கேள்விகள் மூலம் கற்றல் திறன் ஊக்குவிக்கப்படுதல், கூர்சிந்தனை, சிக்கல் தீர்த்தல், கூட்டுப்பணி, தகவல் தொழில்நுட்பம், சுயதிறன் வளர்ப்பு, உலகப் பார்வை போன்ற திறன்கள் அனைத்துப் பாடத்திட்டங்களிலும் இணைக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருப்பது எதிர்காலத் தலைமுறையினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மாணவர்கள் ஒரு கருத்தைப் புரிந்து கொண்டு அதைச் செயல்படுத்தும் திறனை மதிப்பிடும் வகையில் தேர்வு முறைகள் மாற்றி அமைத்தல், மதிப்பெண்களாக இல்லாமல் மதிப்பீடுகளை நோக்கி தேர்வுகள் அமைத்தல், ஆசிரியர்களுக்குத் தொழில்நுட்பப் பயன்பாடு, உடனடிப் பயிற்சி, சக-ஆசிரியர்கள் வழிகாட்டுதல் மற்றும் சிறப்புக் குழுக்களுக்கான கூடுதல் பயிற்சிகள் வழங்குதல் ஆகியவை முக்கியமானதாகும்.
குறிப்பாக, பாதுகாப்பான வகுப்பறைகள், உடல் மற்றும் மன நலம் சார்ந்த கண்காணிப்பு, பாலின சமத்துவத்துக்கான வாய்ப்புகள் ஆகியவை உறுதி செய்யப்படும். அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுதல் என்பது வரவேற்கத்தக்கது.
கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ எனும் நிலையை உருவாக்குதல், பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைக்கும் கல்வி, அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகம், கணினி வசதிகள், குடிநீர், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்துதல், ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்குதல், பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்குதல் பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகம், சமூக நலத்திட்டங்கள், முன்னாள் மாணவர்களின் பங்கு (“விழுதுகள்”), போன்ற சமூகப் பங்கேற்புத் திட்டங்கள் ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.