சென்னையில் 9 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை கிடைக்கும் - வங்கி கணக்கு சரி பார்க்கும் பணி முடிந்தது



கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பயனாளிகளை தேர்வு செய்ய 3 கட்டமாக சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடத்தப்பட்டன. சென்னையில் இத்திட்டம் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2 கட்டமாக ரேஷன் கடைகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியான பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,727 சிறப்பு முகாம்கள் மூலம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 807 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 லட்சம் பெண்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன்பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் விதிமுறைகளின்படி குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே வேறு திட்டங்களில் பயன்பெறக் கூடிய பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டதால் அவர்கள் விண்ணப்பிக்கவில்லை. மொத்தமுள்ள 1428 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களில் முறையான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் தெரிவிக்காமல் இருந்த குடும்ப தலைவிகள் வீடுகளில் மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியானவர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்த்தனர்.

பெறப்பட்ட மனுக்களில் எல்லாவற்றையும் ஆய்வு செய்யாமல் சந்தேகமாக இருந்த, உரிய தகவல் இல்லாத விண்ணப்பதாரர்களின் வீடுகளில் மட்டும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு உள்ளதா? அவை நடப்பில் செயல்பாட்டில் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது. விண்ணப்பித்த பெரும்பாலான பெண்களின் வங்கி கணக்கு முறையாக இருந்ததால் எவ்வித பிரச்சினையும் எழவில்லை. அதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனி ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது. பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் 9 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும். வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். சென்னையில் நடக்கும் விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 9 லட்சத் திற்கும் மேலானவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றனர்.