மக்களவை தேர்தலில் என்.டி.ஏ. 330 இடங்களில் வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி
டெல்லியில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடியின் அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் அ.தி.மு.க.வுக்கு பாரதீய ஜனதா கட்சி மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டு எங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே தேர்தல்களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளேடு கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த இருபெரும் தலைவர்களின் வழியிலேயே அ.தி.மு.க. செயல்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கொரோனாவால் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் அதுபோன்ற நெருக்கடி ஏற்படவில்லை. 9 ஆண்டுகள் மோடி சிறப்பான ஆட்சி அளித்துள்ளார். உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி இருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படும் அரசாக மத்திய அரசு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் அதற்கு துணை நிற்கின்றன. எனவே பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 330 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும என்று நம்புகிறோம். தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அப்படியே நீடிக்குமா என்று கேட்கிறீர்கள். அந்த கேள்விக்கே இடம் கிடையாது. சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய மரியாதை தேசிய ஜனநாயக கூட்டணிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.
1½ கோடி உறுப்பினர்கள்ளாக இருந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் அ.தி.மு.க. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இன்று இளைஞர்கள் பலர் இணைந்துள்ளனர். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை பற்றி இப்போது எதுவும் பேசப்படவில்லை. பேட்டியின்போது எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.