மணிப்பூர் கலவரமும்.. மக்கள் மனநிலையும்..! மரண ஒலங்களை தடுக்க என்ன வழி…!
மணிப்பூர் சம்பவம் இந்திய வரலாற்றில் கருப்பு தினமாகவே பதிவு செய்யப்படும். பெண்கள் ஆடைகளை களைந்து வீதியில் ஊர்வலமாக அழைத்து வந்து பெண் இனத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். அது மட்டுமல்லாமல் தாய் குலத்திற்கு பாதுகாப்பாற்ற சூழலை தோற்றுவித்துள்ளது. ஆணுக்கு நிகர் பெண்கள் என்று போற்றி புகழும் மனித இனம் இந்த நிகழ்வைக் கண்டு முகம் சுளிக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நிர்வாணப்படுத்தியது குறித்து விவாதம் நடத்துகிறது. இவற்றை பெரிதுபடுத்துவதுடன் நிமிடத்திற்கு நிமிடம் நிர்வாணம் குறித்து பேசி பேசி பெண்கள் சமூகத்தின் பெருமையை ஏலம் போடுவது போல் விவாதம் என்ற பெயரில் அசிங்கத்தை விளம்பரம் செய்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஊடகவியலாளர்கள் பெண்களைக் கொண்டு விவாதம் செய்யப்படுகிறது. நெஞ்சு பொறுக்கவில்லை நெஞ்சு பொறுக்கவில்லை நிலைகெட்ட மாந்தரை நினைத்தால் என்று எண்ணி நகையாடத் தோன்றுகிறது. கண்களில் இரத்தம் வடிகிறது. இப்படியொரு சம்பவம் இந்தியாவில் ஒரு சிறிய மாநிலத்தில் மணிப்பூரில் நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஏன் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் மாநில முதல்வர் உள்பட அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்கட்சிகளும் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் இன்று பகிரங்கமாக குற்றம் சுமத்துகிறார்கள்.

இது மட்டுமா ஊடகங்கள் தொலைக்காட்சிகள் சோஷியல் மீடியாக்கள் பேஸ்புக், டுவிட்டர் இப்படி பல தரப்பில் இருந்தும் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்திய அரசு மீதும் பழி சுமத்துகிறார்கள். அதே நேரம் மணிப்பூரில் உள்ள இரண்டு சமூகங்களுக்கும் ஏற்பட்டுள்ள பகையும் ஒருவருக்கு ஒருவருக்குள் மோதலாக உருவெடுத்து அதை தடுத்து நிறுத்தும் பணியை மாநில அரசு தவறிவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

அதே நேரம் போராட்டத்தின் ஒரு நிகழ்வாக இத்தகைய தவறான செயலில் ஈடுபட்டு, பெண்கள் மீது உள்ள அடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று இந்திய நாட்டுக்கும், மணிப்பூர் மாநிலத்திற்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இது கடும் கண்டத்திற்கு உரியது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். முடிந்தால் மரண தண்டனை வரை வழங்கலாம். இது ஒரு பக்கம் பார்வை!

இன்னொரு பக்கம் திரும்பிப் பார்க்க நாம் ஏன் தவறிவிட்டோம் என்று யோசிக்கக் தோன்றுகிறது. குறிப்பாக ஆளுங்கட்சி தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது சட்டப்படி நியாயம் என்றால் இந்த சம்பவத்தை கண்டும் காணாமலும் இருந்துள்ள எதிர்கட்சிகள் எங்கே போனது? சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் இந்த கொடூர குற்றம் குறித்து ஏன் காவல்துறைக்கும், அரசுக்கும் தகவல் தரவில்லை? அப்படியே புகார் கொடுத்தும் ஆளுங்கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது என்றாலும், கொடூர சம்பவம் குறித்து மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து பகிரங்கப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்கலாம். அதை ஏன் எதிர்கட்சிகள் செய்யத் தவறியது இது குறித்து நாம் விவாதிக்காமல் இருப்பது நியாம் தானா?

பேசாமல் இருப்பது நியாம் தானா? எப்பொழுதும் ஒரே பக்கம் குற்றம் குறித்து மட்டும் யோசித்து பேசும் நாம் மறுபக்கம் அதன் மவுனம் குறித்து பேசாமல் இருப்பது தர்மமாகுமா? கத்தியை எடுத்தவனை பற்றி பேசும் நாம் விஷம் தடவிய கத்தியை கொடுத்தவன் யார்? என்று மாற்றி யோசிக்க வேண்டாமா? நாம் நடத்திய விவாதத்தில் கத்தியை பிடித்தவனும் கத்தியை கொடுத்தவனும் ஒருவன் என்று விவாதம் நடத்துகிறோம்.

தவறு செய்யும் போது அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கைப் பார்த்தவனை என்னவென்று கூறுவது? நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் நேரம் பார்த்து எதிர்கட்சிகளுக்கு ஆதாரம் தரும் வகையில் வீடியோவை வெளியிட்டு ஆளுங்கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் இருப்பது பாரதிய ஜனதா கட்சி என்று கூறுகிறோம். ஏன் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல கட்சிகள் இருந்தும் இத்தகைய சம்பவம் நடந்த பொழுது எங்கே இருந்தார்கள் என்ற கேள்வி எழாதா? இதற்கு நம்மிடம் என்ன பதில் இருக்கு?- நடுநிலை என்பது எங்கே? ஒரு தலைப்பட்சமான விவாதம் எதற்கு என்று மக்கள் கேட்க மாட்டார்களா?

பெண்கள் அவமானப்படுத்தப்பட்டு ஆடைகளை களைந்து வீதியில் அழைத்து வரப்பட்டது அரசியல் நிகழ்வா? வன்முறையாளர்களில் வெறியாட்டமா? பிரதமர் மோடியை வீழ்த்துவதற்கு இது ஒரு ஆயுதமா? மத்தியில் ஆட்சிக்கு வரக் கூடாதவர்கள் வந்து விடக் கூடாது என்பதற்காக 28 மாநில கட்சிகள் ஒன்றிணையும் போது மணிப்பூர் கலவரத்தை அடக்குவதற்கு ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறலாமே!

அதைத் தவிர்ப்பதேன்? ராகுல்காந்தி மணிப்பூர் சென்று வந்தார் மாநில அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. அதற்காக எந்த அமைப்புகள் குரல் கொடுத்தது என்பதை நாம் பார்த்தோம். இது குறித்து எத்தனை நாள் தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதம் நடத்தியது? எதிர்கட்சிகளுக்கும் கடமை உண்டு. பெண்களை பாதுகாக்கும் பொறுப்பும் உண்டு. ஆணுக்கு நிகர் பெண்கள் என்கிறோம். ஆணாதிக்க அரசியல் குறித்தும் பேசுகிறோம். ஆனால் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்குவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பு-வதோடு சரி! பிறகு மறந்து விடுவோம். இது மக்கள் ஆட்சி தத்துவம். மாற்றி யோசிப்போம். மாற்றுக் கட்சிகள் குறித்தும் விவாதிப்போம். மணிப்பூர் சம்பவம் இனி இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடைபெறாமல் தடுத்து நிறுத்துவோம். மவுனம் கலையட்டும் மக்கள் ஆட்சி மலரட்டும். மணிப்பூரில் அமைதி திரும்பட்டும்.

இது இரண்டு சமுதாய மக்களின் பிரச்சனையாக உருவெடுத்து மதம் மாற்றத்தின் அடிப்படையில் இடம் பெயர்ந்தவர்களால் ஏற்பட்ட பிரச்னையாக உருமாறி தனி நாடு கேட்கின்ற அளவிற்-கு மணிப்பூரில் ஒரு நிலைமை உருவாகியிருக்கிறது என்றால் இதற்கு முழு முதற் காரணமாக கூறப்படுவதும், பேசப்படுவதும் போதை பொருள் விற்பனையும், கடத்தலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மணிப்பூரில் நிலங்களை சிலர் வாங்கலாம், சிலர் வாங்க கூடாது என்ற நிலைமையும் இந்த கலவரத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதற்கு மேல் மணிப்பூர் காவல்நிலையத்தில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கிகள் தனி தனி குழுக்கள் கொள்ளையடித்து அதை வைத்துக் கொண்டு வீதிகளில் உலா வருவதும் அதை தடுக்க முடியாமல் காவல்துறையும், ராணுவமும் வேடிக்கை பார்பதும் எதற்காக என்பதை பார்க்கும் பொழுது தவறுகளை தட்டிக் கேட்கும் பொழுதெல்லாம் வீட்டில் உள்ள ஆண்களை பாதுகாப்பதற்காக இளம் பெண்கள் உள்பட வயதான பெண்கள் கூட தங்கள் ஆடைகளை தாங்களே களைந்து கொண்டு வீதிகளில் காவல்துறையினரை அடித்து விரட்டும் காட்சிகளையும் பார்க்கும் பொழுது காவல்துறையும், ராணுவமும் எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி வருத்த்தை தருகிறது. ஆளுங்கட்சிக்கும் இத்தகைய நிலைமைகள் ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மணித் துளிகளில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பதிலாக நாள் கணக்கில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் புரிந்துக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் விரைவில் சுலபமாக அமைதியை உருவாக்க முடியும்.

- டெல்லிகுருஜி