நடிகர் விஜய் மக்கள் இயக்கமும்
புதுவை முதல்வர்
ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரசும்
தமிழ்நாட்டில் கால் பதிக்குமா..?நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக உருவெடுத்து புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் கைகோர்த்து தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் கால் பதிக்குமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜய்யை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது அரசியல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிகார பூர்வமாக நடிகர் விஜய் தரப்பில் இருந்து மன்ற செயலாளர் புஸ்ஆனந்த் மூலமாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

சு0சு4 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பூத் வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து தனது வாக்கு வங்கியின் சக்தியை நிரூபிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து மக்கள் மன்றத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி காட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தமிழ்நாட்டில் சு0சு6 ஆம் ஆண்டு நடைப்பெற போகும் சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் தமிழ்நாட்டில் 60 முதல் 70 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிப்பெறுவதற்கான முயற்சியில் விஜய் மக்கள் மன்றம் தீவிர பணியில் ஈடுபட வேண்டும் என்று நடிகர் விஜய் விரும்புவதாகவும் இதற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களின் ஆலோசனையை பெற்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்து அதன் மூலம் கணிசமான அளவிற்கு வாக்குகளை பெறமுடியும் என்று நடிகர் விஜய் நம்புவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய முயற்சிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும் புதுச்சேரி முதல்வரும் சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும், கூறப்படுகிறது.

காரணம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் நடிகர் விஜய் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் இல்லை என்பதினால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை தனது அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு செயல்படுவோம் என்ற முடிவுக்கு நடிகர் விஜய் வந்ததாகவும், கூறப்படுகிறது. புதுச்சேரியில் கட்சி தொடங்கிய பு5 நாட்களில் ஆட்சியை பிடித்து 5 ஆண்டுகள் சிறப்பாக நிர்வாகத்தை வழிநடத்தியவர் என்பதும், திருமணமே செய்து கொள்ளாமல் காமராஜரைப் போல் உடையணிந்து காமராஜரையே தனது குருவாக ஏற்றுக்கொண்டு இன்றைக்கும் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்று முதல்வராக செயல்பட்டு வருவதுடன் தினசரி நான்குமணி நேரம் காலை, மாலை இரண்டு நேரமும் உடல் ஆரோக்கியத்தை கருதி டென்னிஸ் விளையாடி வரும் முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகள் அவரது அரசியல் திட்டங்கள், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்ற சாணக்கியத்தனம் போன்றவை நடிகர் விஜய்யை வெகுவாக கவர்ந்து உள்ளதால் ரங்கசாமி அவர்களோடு கைகோர்த்து, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் களமாடுவதற்கு விரும்புவதாக கூறப்படுகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகளிலும், உள்ள தனது ரசிகர்களையும் மன்ற நிர்வாகிகளையும், ஒன்றுப்படுத்தும் விதமாக மாற்றுகட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள், அந்த பொறுப்பில் இருந்து விடுப்பட்டு விஜய் மக்கள் மன்ற பொறுப்புகளில் மட்டுமே இருந்து செயல்பட வேண்டும் என்று ரசிகர்மன்ற நிர்வாகி புஸ்ஆனந்த் அவர்கள் ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு சமீபத்தில் சுற்றறிக்கையை அனுப்பியிருப்பதும் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து உள்ளதுடன் பல்வேறு கேள்விகளையும், தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம் ரஜினிகாந்த் அரசியல் வருவதற்காக அடிக்கடி கூறிக்கொண்டு இருந்து உடல்நலத்தை காரணம் காட்டி தனது ரசிகர்களின் அரசியல் ஆர்வத்திற்கும், அரசியல் ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்களை ஏமாற்றியது போல் ஒருவேளை நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறி அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டால் அரசியல் ஆர்வமுள்ள தங்களுக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் தோன்றிவிடும் நிலை உருவானால், அதை எவ்வாறு எதிர்கொண்டு சமாளிப்பது என்கின்ற சந்தேகம் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளிடமும், ரசிகர் மன்றத்திடமும் எழுந்துள்ளதால் அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் விஜய் நிர்வாகிகளிடம் நேரடியாக தனது கருத்தினையும், பதிலையும் எடுத்து கூறியதுடன், ரசிகர்கள் சந்தேகத்திற்கு சரியான பதிலை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சங்கங்களின் மக்கள் ஆதரவு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு முழுமையாக கிடைக்கும் என்பதாலும், ஊழலற்ற அரசியல்வாதி என்ற பெரும் புகழும், ரங்கசாமி அவர்களுக்கு இருப்பதினாலும் அவரது செல்வாக்கும் அரசியல் ஆலோசனையும், தமிழ்நாட்டில் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று அரசியல் ரீதியாக எதிர்பார்த்த பலனை தரும் என்கின்ற நம்பிக்கை நடிகர் விஜய் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

ஆகவே நடிகர் விஜய் எடுக்க போகும் முடிவும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களின் கூட்டணியும் தமிழ்நாட்டில் வளம் வந்தால் எத்தகைய வாக்கு வங்கியை கவரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே நேரம் நாடாளுமன்றத்தை குறிவைப்பதை விட சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி தங்கள் கூட்டணியை வலுப்படுத்துவதில் இருதரப்பினரும், இணைந்து செயல்பட விரும்புவதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று பல தலைவர்கள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்ட பொழுது ஆகட்டும் பார்க்கலாம் காமராஜர் பாணியில் பதிலளித்த ரங்கசாமி நடிகர் விஜய் அவர்களை சந்தித்த பின் என்.ஆர்.காங்கிரஸ் கொடி தமிழ்நாட்டில் பறக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறப்படுகிறது.

- டெல்லிகுருஜி

குறிப்பு : தற்பொழுது என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சி கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடைபெற்று வந்தாலும் நடிகர் விஜய் எடுக்கப்போகும் முடிவும் முதல்வர் ரங்கசாமி அவர்களின் முடிவும் ஒன்றாக இருக்கும் என்பதை அரசியல் வட்டாரம் எப்படி பார்க்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.