கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா




கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதுவரை அமைச்சர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் அமைச்சர் ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் நேற்று காலை சந்தித்து, அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதன் பின், அவர்கள் பெங்களூரு திரும்பினர். இதனிடையே டெல்லியில் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக ஆலோசனைக்கு பின், இறுதி செய்யப்பட்ட பட்டியல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.