பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு



நாமக்கல்: நாமக்கல்- திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவுவாயில் அருகே நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரேயா சிங் வரவேற்று பேசினார். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழ் மொழிக்கே அடையாளமாக திகழ்ந்தவர் கவிஞர் ராமலிங்கம். எளிமையான குடும்பத்தில் பிறந்த அவர், வலிமையான தமிழ் புலமையால் கவிதை எழுதி, புகழ் பெற்றவர். விடுதலைக்காக முழுமையாக தமிழ் மொழியை பயன்படுத்தியவர் ஆவார். சிறந்த பேச்சாளர். தனது மேடை பேச்சின் மூலம் விடுதலை போராட்ட உணர்வை ஏற்படுத்தியவர். நாமக்கல் கவிஞரின் சிறப்புகளை தற்போது உள்ள இளைய தலைமுறையிடம் சேர்த்து கொண்டே இருக்க வேண்டும். இந்த சிலையும் எளிதில் வைக்க முடியவில்லை. 20 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தான் இங்கு திறக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேறாத நிலையில், தனியார் இடத்திலாவது வைக்க அனுமதிக்க வேண்டும் என கவிஞர் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு கல்லூரியில் தான் கவிஞரின் சிலையை வைக்க வேண்டும் என அனுமதி அளித்து உள்ளார். பெண்கள் முன்னேற இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான். ஒவ்வொருவருக்கும் நாம் என்னவாக வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருக்கும். அதை நோக்கி பயணிக்க, உழைக்க தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.