டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகைதமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், 'பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்து.

வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளதாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகிறது.