உறவு கொண்டாடும் பாசமுள்ள அத்தைகள்..!



பாசமலர் படத்துக்குப் போகும்போதே அழுதழுது தலைவலிக்கும் என்பதால் அனாசின் மாத்திரை வாங்கி முந்தானையில் முடிச்சிட்டு தியேட்டருக்கு கொண்டுபோன அத்தைகளிருந்தார்கள். எம்மகளை கட்டிக்கடா மருமகனே என்றபடியே அண்ணன் மகன்களின் முகத்தைத் தொட்டுக் கொஞ்சி முத்தமிட்ட அத்தைகளிருந்தார்கள்.

சின்னப் பாத்திரத்தில் கறித்துண்டுகள், நீந்தும் கோழிக்குழம்பை இடதுகையால் பிடித்து முந்தானைச் சேலையால் மூடிக் கொண்டு வந்து பையனுக்குக் கொடுங்க அண்ணி என்று கொடுத்துவிட்டுப் போன அத்தைகளிருந்தார்கள்.

மருமகன்களின் பிறந்த நாட்களில் அத்தை தரும் சில்லறைக் காசுகளை மறுதலித்தால் கண்கள் நிறைந்த அழுகையாய் மூக்குறிஞ்சியபடி காசை வாங்கிக்கடா என்று கெஞ்சிய அத்தைகளிருந்தார்கள். குளிக்க மறுத்து ஓடிப்போகும் அண்ணனின் சிறு மகன்களைத் துரத்திப்போய்ப் பிடித்து வந்து சிரிப்புக் காட்டி அம்மணமாய் நிறுத்தி எண்ணை தேய்த்துக் குளிக்க வைத்த அத்தைகளிருந்தார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி முடித்து பாலிடெக்னிக் சேர்க்க பணம் குறைந்து கைபிசைந்து நின்ற நேரத்தில் இதைவெச்சு காலேஜுல சேர்த்துகுங்க அண்ணி, அப்புறமா பார்த்துக்கலாம் என்றபடி எண்ணையிறங்கிய கல்லுக் கம்மலைக் கழட்டிக் கொடுத்துப்போன அத்தைகளிருந்தார்கள். வெட்கத்தில் நெளிந்தபடி உடைந்த விடலை இருகுரலில் பேசும் மருமகனின் அரும்புமீசைப் செல்லமாய்ப் பிடித்து இழுத்தபடி என் மருமவனே வயசுக்கு வந்திட்டேடா என்று கிண்டலடித்துக் கூசவைத்த அத்தைகளிருந்தார்கள்.

சகோதரனின் பிள்ளைகளுக்கு பெரியம்மை வந்த காலத்தில் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டு மண்சோறுதின்ற வெள்ளந்தி அத்தைகளிருந்தார்கள். எம் மவனுக்குப் பொண்ணு கொடுக்காமல் பெறத்திக்குக் கொடுக்கிறியே சண்டாளா என்று அண்ணனிடம் சண்டையிட்டுப்போன அத்தைகள் இருந்தார்கள்.

போகட்டும் ரெண்டாம் மகனுக்காகவது பொண்ணைக் கட்டிக் கொடுத்திரனும் எப்படியாவது சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டே மூக்கு நுனியில் கண்ணீர் வடித்தப்படி மூத்தவனின் திருமணத்தில் பாத்திரங்களை விளக்கிக் கொடுத்த அத்தைகளிருந்தார்கள்.

அண்ணன் பாவம் நொடிஞ்சி கெடக்குது எனக்கு வீடெல்லாம் வேண்டாம் அண்ணனுக்கே கொடுத்திருங்க. ஒங்க மாப்பிள்ளைகிட்டே நான் சொல்லிக்கிறேன் என்று தகப்பனிடம் அண்ணஞுக்காக மன்றாடிய அத்தைகள் இருந்தார்கள். எல்லாந் தொலைந்து கூட்டுக் குடும்பங்கள் அழிந்துபோய் காங்கிரீட் கூடுகளுக்குள் பிழைத்துக் கிடக்கும் ஒற்றைப்பிள்ளைக் குடும்பங்களின் அடுத்த தலைமுறைக்கு வாய்க்கப் போவதேயில்லை…

இப்படி பல வீடுகளில் அண்ணன், தங்கைகள், அக்கா, மாமா என்ற உறவுகள் இருந்தது. பழைய காலங்கள் ஆனால் தற்பொழுது அந்த உறவும் நட்பும், பாசமும் இருக்கும் இடம் தெரியாமல் காற்றில் பறந்துவிட்டது. இருந்தாலும் அத்தைகளின் பாசமும், அண்ணன், தங்கைகள் உறவும் இன்று இருப்பதில்லை இருந்தாலும் பாசம் உறவு விட்டுபோவதில்லை! காரணம் நட்பு, காதல், கலப்பு மணம் என்று பல கதைகள் கூறுவதால் புது வாழ்க்கையை கட்டாயம் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அத்தைகளுக்கும் வந்துவிட்டது. உறவுகள் அறுந்தாலு பாசம் விடுவதில்லை.