ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும்- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை



புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் பாராளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். கடந்த ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவின் முதல் கூட்டுக்கூட்ட உரை இதுவாகும்.

இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சுதந்திரத்தில் 75-வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் உரையாற்றுகிறேன். இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம். 2047-ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். அதில் பழங்காலத்து பெருமையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இருக்க வேண்டும். இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் சவால் நிறைந்ததாக இருக்கும். 2047-ம் ஆண்டில் முழு வளர்ச்சியை காண்பதற்காக அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும். அனைத்து தரப்பினரும் நல்ல நிலையில் இருக்கும் நிலை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக வேண்டும். வெளிநாடுகளில் ஆதரவில் இருந்த நாடு சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளது. சுய சார்பு நாடாக மாறி உள்ளது.

இந்தியா நவீன கட்டமைப்பை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தை அடைந்திருக்கிறது. 9 ஆண்டுகளில் இந்தியா வின் மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது. நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது. நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது. உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது. நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்பட்டுள்ளன. ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பாக, இளைஞர்கள் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள் ஆகும். முன்பு வரி திரும்பப்பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்த சில நாட்களுக்குள் பணம் திரும்ப பெறப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் வெளிப்படைத் தன்மையுடன் வரி செலுத்துவோரின் கண்ணியமும் உறுதி செய்யப்படுகிறது. 

கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பு அரணாக விளங்கியது. கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது. கொரோனா காலத்தில் ஒரு ஏழைக்கூட பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருந்து ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊழல் என்பது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி என்பது அரசின் தெளிவான கருத்து ஆகும்.

தனியார் நிறுவனம் கூட செயற்கைகோளை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பசுமை வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துகிறது. ஜி.20 உறுப்பு நாடுகளுடன் இணைந்து உலகளாவிய சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளை காண இந்தியா முயற்சிக்கிறது. இவ்வாறு ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது. 2023-24-ம் ஆண்டுக் கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கூட்டங்களாக நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் முதல்கட்டம் பிப்ரவரி 14-ந்தேதி வரையும், 2-வது கட்டம் மார்ச் 12-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரையும் நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொட ரின்போது இரு அவைகளும் 23 அமர்வுகளில் கூடவுள்ளது. இதில் 36 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.