அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் பா.ஜ.க.புதுடெல்லி: பா.ஜனதா கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்றது. பதிவான வாக்குகளில் 37.36 சதவீத பேரின் ஆதரவை அந்த கட்சி பெற்றிருந்தது. நாடு முழுவதும் சுமார் 23 கோடி பேர் அந்த கட்சிக்கு வாக்களித்து இருந்தனர். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை விட 2019-ல் பா.ஜனதாவுக்கு சுமார் 7 சதவீத வாக்குகள் அதிகரித்து இருந்தன. இந்த வாக்கு சதவீதத்தை தொடர்ந்து அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இதை கருத்தில் கொண்டே அடுத்தக்கட்ட அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர் மோடியும், மந்திரி அமித்ஷாவும் தயாராகி வருகிறார்கள். வருகிற 16, 17-ந் தேதிகளில் டெல்லியில் பா.ஜனதா கட்சியின் உயர்மட்ட குழுக்களின் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டங்களில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக கட்சியிலும், ஆட்சியிலும் சில அதிரடி மாற்றங்களுக்கு பா.ஜனதா தயாராகி வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிரதமர் மோடி வருகிற 15-ந் தேதிக்கு பிறகு 4 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. 1. மத்திய மந்திரி சபையை மாற்றி அமைப்பது. 2. மக்களை கவரும் வகையில் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வது. 3. பல மாநிலங்களில் கவர்னர்களை மாற்றி அமைப்பது.

  1. பா.ஜ.க. மந்திரிகளில் சிலரை கட்சிப்பணிக்கு மாற்றுவது. அதோடு பா.ஜ.க. நிர்வாகத்திலும் மாற்றங்கள் செய்வது. இந்த 4 நடவடிக்கைகளும் பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு 11 மாநிலங்களில் சட்டசபை தேர்தலை பா.ஜனதா சந்திக்க வேண்டி இருப்பதால் இந்த 4 மாற்றங்களையும் இந்த மாதத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய மந்திரிகளில் 4 பேர் கட்சிப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர். சில மந்திரிகளின் இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளது. சிலர் மத்திய மந்திரி சபையில் புதுமுகங்களாக இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. இதுபற்றிய யூகங்களும், எதிர்பார்ப்புகளும் டெல்லி வட்டார அரசியலில் பேசப்பட்டு வருகிறது.

அதுபோல 5 மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றப்பட உள்ளனர். அசாம், மேகாலயா உள்பட சில மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கிடையே பட்ஜெட் தயாரிப்பு பணிகளும் தீவிரமாகி வருகிறது. பட்ஜெட்டில் பெரும்பாலானவர்கள் பயன் அடையும் வகையில் வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 81 கோடி பேருக்கு ரேசனில் இலவச பொருட்கள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அதிக மக்களை கவரும் வகையில் திட்டங்களை கொண்டு வரவும் பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். இதற்கிடையே அமித்ஷா தேர்தல் நடக்கும் மாநிலங்களை குறி வைத்து சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். நாளை அவர் திரிபுராவில் ஆலோசிக்கிறார். அதன்பிறகு மணிப்பூர், நாகாலாந்து, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தடுத்து செல்ல இருக்கிறார். ஜனவரி 29-ந் தேதி வரை அவர் 11 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தலுக்காக பா.ஜ.க.வை தயார்படுத்த உள்ளார். எனவே வருகிற 15, 16-ந் தேதிகளுக்கு பிறகு பா.ஜ.க. மேலிடத்தில் இருந்து அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.