தைத்திருநாள் கோலாகலமாக தொடங்கியது பொங்கல் பொருட்கள்
வாங்க அலைமோதிய கூட்டம்
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டமானது போகி பண்டிகையுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. போகி பண்டிகையையொட்டி பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை ரோடுகளில் போட்டு எரித்தனர். சிறுவர்கள் மேளம் அடித்து மகிழ்ந்தனர். பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் இன்று மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைப்பதற்கான பொருட்கள், பூஜை பொருட்கள், கரும்பு, மஞ்சள் குலை, பூக்கள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிந்து பொங்கல் வைப்பதற்கான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கோயம்பேடு சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து விற்பனை களை கட்டி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து நள்ளிரவில் ஏராளமான வாகனங்களில் குவிந்த சில்லரை வியாபாரிகள் பொங்கல் பொருட்களை வாங்கி சென்றனர். அதேபோல் அதிகாலை முதல் பொதுமக்கள் அதிகளவில் வந்து பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் வளாகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதேபோல் பூ, பழம் மற்றும் காய்கறி மார்க்கெட்டிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். பூ, வாழைத்தார், வாழை இலை, சிறு கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.