தீவுத்திடலில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் தொழில் பொருட்காட்சி நடைபெறும். கொரோனா பாதிப்பால் 2 வருடமாக பொருட்காட்சி நடைபெறவில்லை. 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டர் நடத்தப்பட்டது. 2 மாத காலம் நடைபெறும் இந்த பொருட்காட்சியை காண சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அதனால் பல்வேறு சிறப்புகளுடன் பொருட்காட்சியை சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
புயல், மழையால் தீவுத்திடலில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி சற்று தாமதம் ஆன நிலையில் தற்போது வேகமாக நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள் 40, 100-க்கும் மேலான ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குதூகலப்படுத்தும் வகையில் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைகின்றன. பள்ளி குழந்தைகள் பயன்பெறக்கூடிய வகையில் அறிவியல் அரங்கம் நிறுவப்படுகிறது. இதுதவிர சுற்றுலா ரெயில், மாநில உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தீவுத்திடலில் இருந்து 'டிரைவ் இன்' ஓட்டல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. காரில் இருந்தபடியே குடும்பமாக உணவு மற்றும் பொழுதுபோக்கும் வகையில் பிரமாண்டமான திரை அமைக்கப்படுகிறது. அதிக அளவில் கார்களை நிறுத்தி இந்த ஓட்டலில் உணவு சாப்பிடக்கூடிய மிகப்பெரிய கூடாரம் அமைக்கப்படுகிறது. இந்த டிரைவ் இன் ஓட்டல் நிரந்தரமாக அங்கு எப்போதும் செயல்படும் வகையில் சுற்றுலாத்துறை சீரமைத்து வருகின்றன. அரசு பொருட்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இருந்த நுழைவு கட்டணத்தை விட 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படும். பொருட்காட்சி நுழைவு வாயில் பாரம்பரிய சிறப்புடன் அமைகிறது. வருகிற 23 மற்றும் 28-ந்தேதிக்கு இடையே பொருட்காட்சியை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.