இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு எதிராக ஆளும் கட்சி எம்.பி.க்கள் போர்க்கொடி



லண்டன்: இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக உள்ளார். இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக்குக்கு எதிராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 40 எம்.பி.க்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர். இதுதொடர்பாக 'கன்சர்வேடிவ் முன்னேற்றம்' என்ற குழுவை சேர்ந்த அந்த எம்.பி.க்கள், பிரதமர் ரிஷி சுனக்குக்கு எழுதியுள்ள எச்சரிக்கை கடிதத்தில் கூறி இருப்பதாவது:- இங்கிலாந்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன. அரசின் திட்டங்களில் பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, சமத்துவம் இருந்தால் அரசுப்பணத்தை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் ரிஷி சுனக்கின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே ஆளும் கட்சிக்குள் புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. அவரது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், எம்.பி.க்கள் தற்போது எழுதியுள்ள கடிதம் அந்த சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.