பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்- 23 அணிகளுடனான ஆலோசனையின் போது மு.க.ஸ்டாலின் உத்தரவு




சென்னை: தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் பொதுக்குழுவும் அண்மையில் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி இந்திய அரசியலில் தி.மு.க. முக்கியமான சக்தியாக திகழ வேண்டும்" என்று பேசி இருந்தார். அதற்கேற்ப கட்சியில் ஒவ்வொரு வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகிறது. இதற்கேற்ப தி.மு.க.வில் உள்ள அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டன. அதன்படி தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக நியமிக்கப்பட்டார். அது மட்டுமின்றி இளைஞரணியின் மற்ற பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

கனிமொழி எம்.பி. கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால் மகளிரணிக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதே போல் தி.மு.க.வில் ஒவ்வொரு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். மாணவரணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, இலக்கிய அணி, தொண்டரணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உள்ளிட்ட 21 அணிகளுக்கு மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி என்று மேலும் 2 அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

ஒட்டு மொத்தமாக 23 அணிகளின் நிர்வாகிகளும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி வளர்ச்சி குறித்தும் 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக் கூறினார். இதன் தொடர்ச்சியாக தி.மு.க.வில் உள்ள 23 அணிகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட 6 குழுக்களின் உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைத்து அணிகளின் நிர்வாகிகள் 416 பேர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "மாவட்ட அளவில் தி.மு.க. அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 23 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எனவே அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில் அணிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும், 2024 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற உங்களது பணி அடித்தளமாக அமையும் என்று கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்ள தி.மு.க.வினர் அனைவரும் தயாராக வேண்டும். இதுவரை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்று வந்ததை போல் 2024 பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெற நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். அதற்கேற்ப உங்கள் செயல்பாடு அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.