பொங்கல் பண்டிகைக்கு முன்பே சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது




சென்னை: தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி கூடி 3 நாட்கள் வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரை கவர்னர் ஆர்.என்.ரவி முறைப்படி முடித்து வைத்தார். இதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டுக்கான சட்டசபை முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் கூடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதே போல் அடுத்த மாதம் பொங்கலுக்கு முன்பே ஜனவரி முதல் வாரத்தில் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எந்த தேதியில் சட்டசபையை கூட்டுவது என்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து சபாநாயகரி டம் தெரிவிப்பார். பொங்கலுக்கு முன்பு கூட்டுவதா? அல்லது அதற்கு பிறகா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிய வரும்.

கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். அதில் அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார். தி.மு.க. அரசின் 1½ ஆண்டு செயல் திட்டம் குறித்தும், மேலும் அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் அதில் கவர்னர் வெளியிடுவார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தும் அரசின் நிலைபாடு குறித்தும் கவர்னர் உரையில் இடம் பெறும் என தெரிகிறது.

கவர்னர் வாசித்து முடித்ததும் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசிப்பார். இதைத் தொடர்ந்து அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படும். இதைத் தொடர்ந்து மறுநாளில் இருந்து விவாதம் தொடங்கும். இதில் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பேசுவார்கள். இதற்கு அமைச்சர்களும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் விரிவாக பதில் அளித்து பேசுவார்கள். சமீபத்தில் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அமைச்சர்களின் இருக்கைகளும் சட்டசபையில் மாற்றி அமைக்கப்படுகிறது.