3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம்- பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்



திருச்சி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அங்கு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அங்கு 'ஸ்டெம் ஆன் வீல்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை ஊக்குவிப்பதன் மூலம் கல்வி முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில் ஆங்கில வார்த்தையில் முதல் எழுத்துக்களை இணைத்து 'ஸ்டெம்' என்னும் வார்த்தை உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களை தன்னார்வலர்கள் மூலம் இருசக்கர வாகனங்களில் சென்று மாணவர்களின் இருப்பிடத்திலேயே கற்றுத் தருவதற்காக ஸ்டெம் ஆன் வீல்ஸ் எனவும் பெயரிட்டுள்ளனர். இதில் இருசக்கர வாகனங்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களை கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார்.