முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்: பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்புசென்னை: இந்தோனேசியா நாட்டின் பாலிதீவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 4-ந்தேதி ஏற்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிலையில் ஜி-20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை டிசம்பர் 5-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்க மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தான் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக அவர் வருகிற 4-ந்தேதி டெல்லி செல்லலாம் என்றும், 5-ந்தேதி கூட்டத்தை முடித்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.