கார்கே தலைமையில் காங்கிரஸ் வலுப்பெறும்- சோனியா காந்தி நம்பிக்கை
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். இதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தி பின்னர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையால் கட்சி வலுவடையும் என்று நம்புகிறேன். புதிய காங்கிரஸ் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து தனது கடின உழைப்பின் மூலம் இவ்வளவு உயரத்திற்கு உயர்ந்திருப்பது தனக்கு மிகப்பெரிய திருப்தியாக உள்ளது. காங்கிரஸ் தலைவராக தனது கடமையை தன்னால் இயன்றவரை செய்தேன். இப்போது இந்தப் பொறுப்பில் இருந்து விடுபடுவதால் நிம்மதியாக இருக்கிறேன். காங்கிரஸ் பல சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.