பிற்போக்கான சட்டங்களை நீக்கினால் தான் நாடு உண்மையாக முன்னேற முடியும்-
பிரதமர் மோடி பேச்சு
அகமதாபாத்: அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவில் நீதித்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக தொழில்நுட்பம் மாறிவிட்டது. காணொலி மூலம் விசாரணை இ-பைலிங் போன்ற சட்ட சேவைகளில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன.

இந்த தொழில் நுட்பங்களை 5 ஜி சேவைகள் மேலும் வலுப்படுத்தும். குஜராத்தில் மாலை நேர கோர்ட்டுகளை தொடங்கினோம். இதில் சிறு குற்றங்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதனால் கோர்ட்டுகள் மீதான சுமை குறைகிறது. சட்டம்-ஒழுங்கு, சமூக முன்னேற்றத்துடன் ஒத்துப்போகும் போது நீதி எளிதாக இருப்பதை உறுதி செய்கிறது. பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவது நமக்கு முக்கியம். அப்போது தான் இந்தியா உண்மையான அர்த்தத்தில் முன்னேற முடியும். காலாவதியான சமூக சட்டங்கள் ஒரே மாதிரியாக மாறினால் அவை முன்னேற்றத்துக்கு தடைகள் என்பதை நாம் அறிந்திருப்பதால் நமது சமூகம் அதிலிருந்து விடுபட்டுள்ளது.

சட்டங்கள் எளிமையான மற்றும் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும். இதனால் அதில் எழுதப்பட்டிருப்பதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள முடியும். நீதி வழங்குவதில் தாமதம் என்பது பெறும் இடையூறாகும். நீதி கிடைப்பதில் தாமதம் என்பது நம் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாகும். இவ்வாறு அவர் பேசினார். இம்மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பழமையான, காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை அகற்றுதல், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்தல், மாநில சட்ட முறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதம் நடைபெறும்.