சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு
கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது?புதுடெல்லி: நாட்டில் சில்லரை பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. கடைசியாக கடந்த 1-ந்தேதி கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது. ரிசர்வ் வங்கி கடந்த மே மாதத்தில் இருந்து 4-வது முறையாக வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் சில்லரை பணவீக்கம் அதிகரிப்பதால் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பணவீக்கம் விகிதங்களை தேசிய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதில் பொருட்களின் சில்லரை பண வீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவு அதிகரித்து 7.41 சதவீதத்தை தொட்டுள்ளது. பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி 1.9. சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஆனாலும் பணவீக்கம் உயர்வு நீடிப்பதால் மீண்டும் வங்கிகளுக்கான கடனை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பரில் மீண்டும் 0.3 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரை கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி அதிகரிக்கும் என நிதி சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.