அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு
புதிய அடையாள அட்டை
எடப்பாடி பழனிசாமி தரப்பின் அடுத்த அதிரடி




சென்னை: அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சட்ட ரீதியிலான போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளன. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பொதுச்செயலாளர் தேர்வை நடத்தக் கூடாது என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 21-ந்தேதிக்கு தள்ளி வைத்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தற்காலிகமாக நிம்மதி பெருமூச்சுடன் உள்ளனர். என்றாலும் அடுத்த கட்டமாக எத்தகைய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள். புதிய நிர்வாகிகள் நியமனம், சுற்றுப்பயணம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு பதிலடி கொடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் அடுத்தக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உள்ள சிலரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி அணியினர் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தங்களுக்கு அனுமதி வழங்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை தயாரிக்கும் பணியில் அவர்கள் ஓசையின்றி ஈடுபட்டு உள்ளனர்.


அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு எம்.ஜி.ஆர். காலத்தில் முழுமையான அளவில் அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு அவரது படம் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வானதால் அவர்களது படமும் சேர்க்கப்பட்ட புதிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அடையாள அட்டையைத்தான் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். எனவே அவரது படம் இல்லாத புதிய அ.தி.மு.க. அடையாள அட்டை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்காக ஓசையின்றி புதிய உறுப்பினர் அடையாள அட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் ஓ.பன்னீர் செல்வம் படம் நீக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி படம் மட்டுமே அதில் இடம்பெற்று உள்ளது. லட்சக்கணக்கில் இந்த அடையாள அட்டையை தயார் செய்து வருகிறார்கள். அச்சடிப்பு பணி முடிந்ததும் மாவட்ட வாரியாக அந்த அடையாள அட்டைகள் பிரிக்கப்படும். பிறகு அவை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பு இந்த புதிய அடையாள அட்டைகளை அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு வழங்க ஆலோசித்து வருகிறார்கள். புதிய அடையாள அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது உறுதியாக இன்னும் தெரியவில்லை.

அடுத்த மாதம் 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் பொதுக்குழு கூட்டம் தொடர்பான இறுதி விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு வந்த பிறகே புதிய உறுப்பினர் அடையாள அட்டை வினியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. புதிய உறுப்பினர் அடையாள அட்டையை ஓ.பி.எஸ்.அணியினருக்கு வழங்காமல் புறக்கணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்வில் கலந்துகொண்டு வாக்கு அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக்கருத்தில் கொண்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி ஓசையின்றி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் இந்த ரகசிய நடவடிக்கை வெளியில் கசிந்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அ.தி.மு.க. தலைமை கழகத்தை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. தொடர்பான அனைத்து கடித போக்குவரத்துகளும் அந்த அணிக்கே இருக்கிறது. இந்தநிலையில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வினியோகம் மூலம் அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதை முறியடிக்க என்ன செய்யலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி அ.தி.மு.க. முன்னாள் மூத்த தலைவர்களை ஒருங்கிணைக்கவும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தீவிரமாகி உள்ளனர். புதிய உறுப்பினர் அடையாள அட்டை காரணமாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.