10.5 சதவிகிதம் வன்னியர் உள்ஒதுக்கீடு காலதாமதம் ஏன்..?
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ஒதுக்கீடாக 10.5 சதவிகிதம் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீடு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால் நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு ஆணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என்ற அதே நேரத்தில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்று தனது தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவிட்டு இருந்த நிலையிலும் இதுவரை மாநில அரசு தனிஉள்ஒதுக்கீடு குறித்து எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதும், இது குறித்த பிரச்சனையை எழுப்புவதற்கு சமூக நீதிக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாமக கட்சியும் மற்றும் பல கட்சிகளும் மௌனம் சாதிப்பது ஏன்-?
சட்டமன்றத்தில் இயற்றிய சட்டம் திமுக ஆட்சியில் ஆளுநர் இடத்தில் கோப்புகள் தேங்கியிருப்பதாக கூறுகிறார்கள். இது குறித்தும், யாரும் கேள்வி எழுப்பப்படுவதில்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவம், கல்வி வேலைவாய்ப்பில் பல இழப்புகளை வன்னியர் சமுதாயம் சந்தித்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக குரூப் 1 தேர்வில் பனிரெண்டுக்கும் மேற்பட்ட டெப்டி கலெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டதில் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்பது ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் தெரியவருகிறது. அதே நேரம் எம்.பி.சி கோட்டாவில் தேர்வு செய்யப்பட்டவர்கள் வன்னியர்கள் இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. இதுகுறித்தும் எந்த அரசியல் கட்சியும், பொது வெளியில் பேசுவதில்லை. அப்பாவி வன்னியர்களுக்காக உயிரை நீத்த சுசு தியாகிகளின் நினைவு நாள் கடந்த செப் 17 ஆம் தேதி வந்து சென்ற நிலையிலும் இடஒதுக்கீடு குறித்து ஒருவர் கூட பேசாமல் இருப்பதும், ஆளுங்கட்சி மௌனம் சாதிப்பதும் வன்னியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதற்கு எப்பொழுது தீர்வு காணப்படும் என்பதை கூட அறிந்துக் கொள்ள முடியாத அப்பாவி வன்னியர்களுக்கும் வாய்ப்புகளை இழந்து நிற்கும் வன்னியர்களுக்கும் இந்த தகவல் பதிவு செய்யப்படுகிறது.