ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில்
ஓணம் பண்டிகைக்காக
அதிகளவு காய்கறிகள் வந்து இறங்கியது



ஒட்டன்சத்திரம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இத்திருவிழா சுமார் 10 நாட்கள் வரை கொண்டாடப்படும். இதற்காக அங்கு வாழும் மக்கள் விதவிதமான காய்கறிகளால் சமையல் செய்து அதனை கடவுளுக்கு படைத்தும், உறவினர்களுக்கு வழங்கி மகிழ்வர். கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கால் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. இந்த வருடம் கேரளாவில் தொடர்மழை பெய்து வந்த போதிலும் ஓணம் பண்டிகை களைகட்டி வருகிறது. கேரளாவுக்கு ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டிலிருந்து அதிகளவு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ஓணம் பண்டிகைக்காக மேலும் அதிகளவு காய்கறிகள் வந்து இறங்கியுள்ளது. நேற்று இரவு 8 மணிமுதல் சுமார் 2 மணிநேரம் ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாது பல்வேறு கிராமங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டன. இந்த காய்கறிகள் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. வருகிற புதன்கிழமை வரை கேரளாவுக்கு தொடர்ந்து காய்கறிகள் அனுப்பி வைக்க வியாபாரிகள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் மார்க்கெட்டில் இருந்து அதிகளவு காய்கறிகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதாலும், தேவை அதிகரித்துள்ளதாலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கடந்த வாரம் விற்ற விலையை விட பெரும்பாலான காய்கறிகள் இருமடங்கு அதிகரித்து விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தங்கி படித்த மாணவர்கள் விடுமுறை எடுத்து தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.