கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி- அ.தி.மு.க.வில் காணாமல் போன பதவிகளால் நிர்வாகிகளை தேடும் தொண்டர்கள்
சென்னை: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பால் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் புரட்டிப் போடப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இரு தரப்பும் மாறி மாறி கோர்ட்டை நாடி வருவதால் புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டு அரசியல் களத்தை அதிர வைக்கிறது. கடந்த மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானார். தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். வங்கி கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்கு சென்றது. சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாகவும் ஆர்.பி.உதயகுமாரை துணைத்தலைவராக நியமித்துள்ளதாகவும் சபாநாயருக்கு கடிதம் அனுப்பினார். ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி.யும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டு அந்த பதவிகளில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். தற்போது சென்னை ஐகோர்ட்டு வழங்கி இருக்கும் தீர்ப்பால் மொத்த நிர்வாக அமைப்பும் புரட்டிப் போடப்பட்டு உள்ளது. ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருப்பதால் புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் செல்லாததாகி விட்டது. எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியும் தானாகவே செல்லாததாகி விட்டது. தற்போதைய நிலையில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட வேண்டும். மீண்டும் பொருளாளர் பதவி ஓ.பன்னீர்செல்வத்திடம் சென்று விடும். இந்த விவகாரத்தில் தவிப்புக்குள்ளாகி இருப்பது சாதாரண தொண்டர்கள் தான். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக அறிவித்து இருந்தார். எனவே இப்போது இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்று தொண்டர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.