திமுக ஆட்சியை உயர்கல்வியின் பொற்காலமாக மாற்ற வேண்டும
துணை வேந்தர்களுக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. தமிழகத்தில் இயங்கும் 21 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்- பதிவாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ரகுபதி, மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், தங்கம் தென்னரசு, அனிதா ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டனர். மாநாட்டில் தலைமை செயலாளர் இறையன்பு தொடக்க உரை நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பேசினார்கள். இறுதியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நாட்டின் சிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் 19 பல்கலைக்கழகங்கள் உருவாகியுள்ளன. திராவிட ஆட்சிக்காலத்தில் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியை உயர்கல்வியின் பொற்காலமாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாற்ற வேண்டும். தமிழகத்தில் கல்வித்துறையில் நாம் மேலும் உயர்ந்து நிற்க வேண்டும். வெறும் வேலைவாய்ப்பு தருவது மட்மே உயர்கல்வியின் நோக்கமல்ல. கல்வித்தரம் உயர்வதுடன் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை உயரும்போது கல்வியின் தரம் குறைகிறது என்ற வாதத்தை ஏற்கமாட்டேன்.
தொழில் நிறுவனங்களின் பங்களிப்போடு பாடத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அது மாநில உரிமை சார்ந்தது. நீட் தேர்வு மட்டுமின்றி புதிய தேசிய கல்விக்கொள்கையையும் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.