மெரினாவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி



சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா ராஜாஜி சாலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும். இதில் அணி வகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். சுதந்திர தின விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் மெரினாவில் நடந்த சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி மெரினாவில் நடக்கும் 75-வது சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சுதந்திர தின விழாவுக்கு வயதானவர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்து வர வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோட்டை கொத்தளத்தில் 2-வது ஆண்டாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றுகிறார்.