சென்னை வால்டாக்ஸ் சாலை யானைக்கவுனி மேம்பாலம் இறுதிகட்ட பணிகள் மும்முரம்- விரைவில் திறக்க ஏற்பாடு



சென்னை: சென்னை வால்டாக்ஸ் சாலை யானைக்கவுனி புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னை வால்டாக்ஸ் ரோடு- சூளை சால்ட் குவாட்டர்ஸ் பகுதியை இணைக்கும் வகையிலான 100 ஆண்டு பழமைவாய்ந்த யானைக்கவுனி 50 மீட்டர் நீள மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. இதனால் அந்த பழைய பாலத்தில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அதே இடத்தில் நவீன வசதிகளுடன் விசாலமான வகையில் புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக அந்த பழைய பாலம் முழுவதும் இடிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் மேம்பாலத்தின் கீழே ரெயில்கள் இயக்கப்படாத போது பழுதடைந்த யானைக்கவுனி மேம்பாலம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. புதிய மேம்பாலம் அமைப்பதற்காக ரெயில்வே தண்டவாளங்களையொட்டி பிரமாண்ட ராட்சத தூண்கள், கான்கிரீட் உத்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது தூண்களை இணைக்கும் வகையில் கான்கிரீட் உத்திரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. மேம்பாலம் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டன. ஓரிரு மாதங்களில் இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைய உள்ளது அதன் பின் இந்த பாலத்தில் நான்கு வழி போக்குவரத்து நடைபெற உள்ளது. பொது மக்கள் வசதிக்காக விரைவில் பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறிய தாவது:- 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான யானைகவுனி பாலம் வால்டாக்ஸ் சாலை மற்றும் சூளை வால்டாக்ஸ் சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பாலம் ரெயில்வே துறையை சேர்ந்ததாகும். இந்தப் பாலத்தின் இரு புறமும் உள்ள அணுகுசாலை பகுதி மட்டும் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. இந்தப் பாலம் மிகவும் பழுதடைந்த காரணத்தால் கன ரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு கடந்த 2016-ம் ஆண்டு மூடப்பட்டது.

யானைக்கவுனி மேம்பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட ரெயில்வே துறை, மாநகராட்சி இணைந்து பணிகளை மேற்கொண்டது.கொரோனா ஊரடங்கின் போது யானைக்கவுனி மேம்பாலம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. தற்போது புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. புதிய மேம்பாலம் 150 மீட்டர் நீளத்துக்கு கட்டப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கூடுதல் ரெயில் தடம், தண்டவாளம் அமைய வாய்ப்பு உள்ளது. இதனால் தடம் கிடைக்காமல் காத்திருக்கும் ரெயில்கள் சீராக இயங்க வாய்ப்பு ஏற்படும். இப்பாலத்தின் அனைத்து பணிகளும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும். அதன் பின் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இப்பகுதியில் ஏற்பட்டு வரும் வாகன போக்குவரத்து நெரிசல் விரைவில் தீர்ந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.