சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம்
சுப்ரீம் கோர்ட்




புதுடெல்லி: அமலாக்கத்துறைக்கு சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்து கைது செய்வது வழக்கமான ஒன்றாகும். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்வது தொடர்பாக மெகபூபா முப்தி, கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். சில விதிகளை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது. ஆதாரங்களை தெரிவிக்காமல் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கான தடையற்ற அதிகாரம் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கன்வால்கர் தலைமையிலான அமர்வு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் உடனே கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று இன்று தீர்ப்பளித்தது. ஒவ்வொரு வழக்கிலும் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை (இ.சி.ஐ.ஆர்.) வழங்குவது கட்டாயமில்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை கைது செய்யும்போது ஆதாரங்களை வெளிப்படுத்தினால் போதும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் முக்கியமான பிரிவுகளை நீதிபதிகள் உறுதிப்படுத்தினர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு விசாரணை அமைப்பின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தி உள்ளது.