அண்ணாசாலை வழியாக நேரடி மெட்ரோ ரெயில் திட்டம்- அதிகாரிகள் தீவிர ஆய்வுசென்னை: சென்னை சென்ட்ரல்-கோயம்பேடு இடையே அண்ணாசாலை வழியாக நேரடி மெட்ரோ ரெயிலை இயக்குவது தொடர்பான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் அண்ணா சாலையில் ஏராளமான நிறுவனங்கள், அலுவலகங்கள், செயல்பட்டு வருகின்றன. இவர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகிறார்கள். இந்த புதிய திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுதாங்கல் போன்ற ரெயில் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகள் கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம் ஆகிய இடங்களுக்கு செல்பவர்கள் ஆலந்தூர் சென்று மாற வேண்டியது இல்லை. நேரடியாக அண்ணா சாலை ரெயிலில் சென்று விடலாம். கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து அண்ணா சாலை வழியாக கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு செல்பவர்கள் இந்த திட்டம் அமலுக்கு வந்து நேரடி ரெயில் இயக்கப்பட்டால் பெரிதும் பயன் அடைவார்கள். பல்லாயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயில் திட்டத்தால் பயன் பெறுவார்கள். அவர்களின் பயண நேரமும் மிச்சமாகும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த ஆய்வு பணிகள் சவாலாக இருப்பதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறி உள்ளனர்.