நடைபாதை, சைக்கிள் பாதை, வாகன நிறுத்துமிடம் வசதிகளுடன் சென்னையில் ஸ்மார்ட் சாலைகள்சென்னை: சென்னையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் ‘ஸ்மார்ட் நகரப்புற சாலைகளாக’ மாறுகிறது. இதற்காக, முதற்கட்டமாக 103 கி.மீ நீளம் கொண்ட 7 சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் நடைபாதை, சைக்கிள் பாதை, வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்படுகிறது, என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரில் 186 கி.மீ நீளம் கொண்ட சாலைகள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், அண்ணாசாலை, காமராஜர் சாலை, வால்டாக்ஸ் சாலை, வேளச்சேரி பைபாஸ் சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை, ஜிஎன்டி சாலை, ஜிடபிள்யுடி சாலை, தரமணி இணைப்பு சாலை உட்பட 16 சாலைகள் அடக்கம்.

இந்த சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தினமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலைகளை பயன்படுத்துவதாக நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, இந்த சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இவற்றை ‘ஸ்மார்ட் நகர்ப்புற சாலை’களாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, சென்னை மாநகரில் 103.5 கி.மீ தூரம் கொண்ட 7 சாலைகளை ஸ்மார்ட் நகர்ப்புற சாலைகளாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, கிராண்ட் சதர்ன் ட்ரங்க் (ஜிஎஸ்டி) சாலை, கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் (ஜிடபிள்யூடி) சாலை, கிராண்ட் நார்தர்ன் ட்ரங்க் (ஜிஎன்டி) சாலை, உள்வட்ட சாலை, வேளச்சேரி பைபாஸ் சாலை, மர்மலாங் பாலம் - இரும்புலியூர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி - ஆவடி சாலை ஆகியவை ஸ்மார்ட் சாலைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது, இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளார். இதற்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ9 கோடி செலவில் டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், அவற்றை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணிகளுக்கு ஆலோசகர் நியமிக்கப்படும் பட்சத்தில், சென்னையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகள், ஸ்மார்ட் நகர்ப்புற
சாலைகளாக மாறும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘தேர்வு செய்யப்பட்ட சாலைகளில் என்னென்ன வசதிகள் ஏற்படுத்தப்படும் என அவர் பரிந்துரை செய்வதின் பேரில் அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும்.

முதற்கட்டமாக 7 சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்து 9 சாலைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதுதவிர, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வயர்கள் பூமிக்கு அடியில் சரியாக பதிக்கப்படுவதையும், வடிகால் சரியாக சீரமைக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான வழிகளையும் இந்த ஆலோசகர் பரிந்துரைப்பார்,’’ என்றார்.


இந்த 7 சாலைகளில் நடைபாதை, சைக்கிள் பாதை, வாகன நிறுத்துமிடம், வாகனத்தின் வேகத்தை மணிக்கு 50 கி.மீ.,ஆக கட்டுப்படுத்தும் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். இதுதவிர, அந்த சாலைகளில் வைபை போல்ஸ், சிசிடிவி கேமராக்கள், தகவல் கியோஸ்க்குகள் மற்றும் போக்குவரத்தை சிறப்பாக நிர்வகிக்க தேவையான பிற வசதிகளும் அமைந்திருக்கும்.


இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகரில் உள்ள சாலைகளில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 50 கி.மீ.,க்கு மிகாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், தகுந்த இடங்களில் சாலை ஹம்ப்ஸ், ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ் மற்றும் ஸ்பீட் டேபிள்கள் போன்ற போக்குவரத்தை சீர்படுத்தும் நடவடிக்கைகளை ஆலோசகர் பரிந்துரைப்பார்.