பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை- எம்.பி.க்களுக்கு சுற்றறிக்கைபுதுடெல்லி: பாராளுமன்ற மழைகால கூட்டத் தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த எம்.பி.க்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு செயலாளர் பி.சி.மோடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், உறுப்பினர்கள், பாராளுமன்ற வளாகத்தை ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், ஸ்டிரைக் அல்லது எந்த மத விழாவையும் நடத்தும் நோக்கத்திற்காக பயன்படுத்தகூடாது. இதற்கு ஒத்துழைக்க உறுப்பினர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை மக்களவை எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடக்கும்போது பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப அமளியில் ஈடுபட்டதால் சபை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதையடுத்து, போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.