மக்களின் ஒவ்வொரு தேவையையும் தேடி தேடி நிறைவேற்றி வருவதுதான் திமுக ஆட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுதிருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.13.66 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.103.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார். பின்னர் பேசிய அவர்; மக்களின் ஒவ்வொரு தேவையையும் தேடி தேடி நிறைவேற்றி வருவது தான் திமுக ஆட்சி. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1703 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 2218 மனுக்களில் 1741 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 20,513 பேருக்கு கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 3750 பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் 85 லட்சம் முறை பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3.13 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மக்களை சந்திக்கும் பொது ஏற்படும் உற்சாகம் அளப்பரியது. திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுவதுக்கும் வழிகாட்டுகிறது.

இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு தான் இருந்துள்ளது. பாஜகவை தவிர அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் திராவிட மாடல் இந்தியாவின் வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளது. விளிம்புநிலை மக்கள் பற்றி கவலைப்படும் அரசு திராவிட முன்னேற்ற கழகம். இந்தியாவில் 27% இடஒதுக்கீட்டுக்கு வித்திட்டது தமிழ்நாடு. நவீன தமிழ்நாடு கலைஞரால் உருவாக்கப்பட்டது இவ்வாறு கூறினார்.