சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
தொடர்ந்து உயர்வு
கொரோனா தினசரி பாதிப்பு 7,500-ஐ தாண்டியது



புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று பாதிப்பு 7,240 ஆக இருந்த நிலையில் இன்று 7,500-ஐ தாண்டி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,584 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 2,813, கேரளாவில் 2,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 622, கர்நாடகாவில் 471, அரியானாவில் 348, தமிழ்நாட்டில் 185, உத்தரபிரதேசத்தில் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 5 ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்த 3,791 பேர் நேற்று முழுமையாக நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 44 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பு அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 36,267 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 3,769 அதிகம் ஆகும். தொற்று பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 17 மரணங்கள், நேற்று டெல்லி மற்றும் ராஜஸ்தானில் தலா 2 பேர், மகாராஷ்டிரா, சிக்கிம், உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 24 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு மொத்தம் 5,24,747 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் நேற்று 15,31,510 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 194 கோடியே 76 லட்சத்தை கடந்துள்ளது. இதற்கிடையே நேற்று 3,35,050 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.41 கோடியாக உயர்ந்துள்ளது.