மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
பேரறிவாளன் விடுதலை குறித்து
மு.க.ஸ்டாலின் பேட்டி
பேரறிவாளன் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

32 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை இன்றைக்கு உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசினுடைய மூத்த வழக்கறிஞர் வைத்த வாதங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 7 பேர் விடுதலையில் கழக அரசு முனைப்போடு செயல்படும் என்பது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 494-வது வாக்குறுதியாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது.

மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும். அதே நிலையில் மாநிலத்தினுடைய உரிமையானது இந்த தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது.

மாநில அரசின் கொள்கையில், அவர்களது முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று நீதியரசர்கள் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இது மிக மிக முக்கியமான ஒன்று.

ஆளுநர் செயல்படாத நேரத்தில் நீதிமன்றம் தலையிடும் என்றும் நீதியரசர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசிடம் கேட்க தேவையில்லை என்பதையும் நீதியரசர்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்.

இதன் மூலமாக மாநில அரசுடைய அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளை தாண்டி ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதியாகி இருக்கிறது.

மாநில சுயாட்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்திருக்கக் கூடிய மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது.

32 ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்திருக்க கூடிய அந்த இளைஞர் இன்று விடுதலை காற்றை சுவாசிக்க இருக்கிறார். அந்த பேரறிவாளனுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தனது மகனுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதியை களைந்திட எந்த எல்லை வரை செல்ல முடியுமோ அந்த எல்லை வரை போராட தயங்காத அற்புதம்மாள் தாய்மையின் இலக்கணமாக விளங்கி கொண்டிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன்.