பா.ஜனதா அரசை கண்டித்து
காங்கிரஸ் நடைபயணம்
கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காங்கிரஸ் நடைபயண நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. மாநில துணை பொதுப்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.

10 நாட்களுக்கு 250 கி.மீ. நடைபயணமாக 250 கிராமங்களுக்கு சென்று காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். காங்கிரஸ் கட்சி இந்திக்கு எதிரான கட்சி அல்ல. இந்திய எல்லையில் பேசும் எந்த மொழியையும் வெறுக்கவில்லை. ஆனால் விரும்பாத மக்கள் மீது மொழியை திணிப்பதை எதிர்த்து வருகிறோம்.

மொழி கொள்கையில் மாற்றம் செய்வதை எதிர்க்கிறோம். ஜவஹர்லால் நேரு இந்திய தேசத்தில் மாநிலங்களை அடையாளப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் மொழி வழி மாநிலங்களை உருவாக்கினார். வேற்றுமையில் ஒற்றுமையை கண்டது இந்தியா.

நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு அரசு வரி விகிதாச்சார அடிப்படையில் நிதி தாருங்கள் என தமிழக அரசு கேட்பதை தவறு என கூறுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு பிரிவினை உணர்வுள்ளவர்கள் இப்படி கேட்பதாக கூறுகிறார்.

9வது, 10வது நிதி கமிசன் அறிக்கையில் 1 ரூபாயில் 60 பைசா மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் 15வது நிதி கமிசன் அறிக்கையில் 35 பைசா மட்டுமே தரப்படுகிறது.

மாநில அரசு தனக்கு வரவேண்டிய தொகையில் 50 சதவீதம் இழக்கிறது. எப்படி நிர்வாகம் நடத்த முடியும். எங்கள் பங்கு 60 பைசா வழக்கமாக வழங்குவதை விட்டு 35 பைசா கொடுத்தால் எப்படி நிர்வாகம் நடத்த முடியும் என கேள்வி கேட்பதை நிர்மலா சீதாராமன் பிரிவினைவாதம் என்கிறார்.

பொறுப்பான இடத்தில் இருக்கும் நிதி அமைச்சர் சரியான பதிலை தர வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் கேட்கும் அதிகாரபூர்வமான கேள்விகளுக்கு அளிக்கும் பதிலா இது. திட்டமிட்டு மாநிலங்களின் வளத்தை குறைக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழகம் போன்ற மாநிலங்களை அடக்கி வைக்க நினைக்கிறார்கள். சமூக நீதி கொண்ட தமிழகத்தை வஞ்சிக்க பார்க்கிறது பா.ஜனதா.

கொடுக்கும் நிதியை நிறுத்தினால் நிர்வாகம் செயலிழந்து போய்விடும் என நினைக்கிறார்கள். கொள்கைகள், உரிமைகள் பறிக்கப்படும் போது பொதுமக்களிடம் சென்று பரப்புரை செய்யும் நிலையில் இருக்கிறோம்.

பா.ஜனதா நாட்டில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. எவ்வளவு வேறுபாடுகள் இருக்கும் நாட்டில் ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே வழிபாடு எப்படி சாத்தியமாகும்.

சாதி, மதம் இறை வழிபாட்டின் பெயரால் இந்த நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் மதசார்பின்மைக்கான எடுத்துக்காட்டான அரசாக அனைத்து மக்களுக்குமான அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது.