மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும்- தமிழக அரசு மீது பிரதமர் மோடி அதிருப்தி

நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்துக் கொண்டனர். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று, பெட்ரோல்- டீசல் விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு குறித்து பேசிய பிரதமர் மோடி, மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் பெட்ரோல் - டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும், வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை என்றும் மத்திய அரசுக்கு செவி கொடுக்காத மாநில மக்கள் தொடர்ந்து சுமைக்கு ஆளாகின்றனர் என்றும் பிரதமர் கூறினார்.

மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். சில மாநிலங்கள் வரிகளை குறைத்துள்ளன. ஆனால் சில மாநிலங்கள் குறைக்காததால் மக்களுக்கு எந்த பலனையும் தரவில்லை.இதனால் இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இது ஒரு வகையில் மாநில மக்களுக்கு செய்யும் அநீதிதான். இது அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நான் யாரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. விவாதிக்கிறேன். வரிகளைக் குறைக்கும் மாநிலங்கள் வருவாயில் இழப்பை சந்திப்பது இயற்கையானது. ஆனால் பல மாநிலங்கள் அந்த சாதகமான நடவடிக்கையை எடுத்துள்ளன.

கர்நாடக மாநிலம் வரிகளை குறைக்காமல் இருந்திருந்தால், கடந்த ஆறு மாதங்களில் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்திருக்கும். குஜராத்தும் ரூ.3500- 4000 கோடி அதிகமாக வசூலித்திருக்கும்.