அனல் காற்று வீசுவதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது- பழச்சாறு விற்பனை அதிகரிப்பு

வேலூர்:

தமிழகத்தில் பனிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில் ஆகஸ்டு மாதம் வரை வாட்டி வதைக்கும். அதன்படி, இந்த ஆண்டின் வெயில் தாக்கம் கடந்த மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு வெயில் அளவு படிப்படியாக உயர தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் தொடக்கத்தில் 90 டிகிரியை கடந்தது. மார்ச் 11-ம் தேதி 95 டிகிரியாக பதிவானது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து வந்த வெயில் அளவு கடந்த 16-ந்தேதி 101 டிகிரியாக பதிவானது.

தொடர்ந்து 29-ந்தேதி வரை 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது அதற்குப்பிறகு மிதமான தட்பவெப்ப நிலை நிலவியது. தமிழகம் முழுவதும் 3 நாட்கள் வெயிலின் தாக்கம் 3 டிகிரி வரை கூடுதலாக சுட்டெரிக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இந்த நிலையில் வேலூரில் நேற்று முன்தினம் மீண்டும் வெயில் சுட்டெரிக்க நேற்று அதிகபட்சமாக 101.5 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.

தமிழகத்தில் வேலூர் உள்பட 7 நகரங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 104 டிகிரி பதிவானது. மதுரை நகரில் 102 டிகிரியும், ஈரோடு, மதுரை விமான நிலையம், திருச்சி, தொண்டி, வேலூரில் தலா 101 டிகிரியும் வெப்ப நிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 98 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரியும் பதிவானது.

தமிழகத்தில் வெயில் நீடித்து வருவதை அடுத்து வெப்ப சலனம் ஏற்பட்டது. அதன் காரணமாக மன்னார் வளைகுடாவில் தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல காற்று சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்துள்ளது கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக கோடநாடு பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது தாளவாடி சோலையாறு போடி நாயக்கனூர் பகுதியில் பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது.

பசிபிக் கடல் மட்டத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக கடல் காற்றில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் கூடுதலாக வெயில் சுட்டெரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் கோரத்தாண்டவத்தால் தேசிய நெடுஞ்சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வெயில் அளவு அதிகரிக்க தொடங்கியதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்துள்ளது.

வெயில் காலம் தொடங்கியதால் மாவட்டத்தில் ஆங்காங்கே பழச்சாறு கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் அரியலூர் உள்பட பல மாவட்டங்களில் குளிரை அடித்து தூக்கிய வெயில் இனி வரும் நாட்களில் 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தும் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்து அறிக்கை அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பொய்யாக்கும் விதமாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் வரும் 2 மாதங்களுக்கு 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.