கானல் நீராகிப்போனது 7 பேர் விடுதலை!


பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்து வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு இந்திய குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி 7 பேர் விடுதலை பிரச்சனையை தள்ளிப்போட்டுள்ளது. மாநில ஆளுநரோ முடிவெடுக்கும் அதிகாரத்தை இந்திய குடியரசு தலைவருக்கு தான் உள்ளது என்று கோப்புகளை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டு அவரும் பஞ்சாப் மாநிலத்திற்கு ஆளுநராக மாற்றல் ஆகி சென்றுவிட்டார். ஆனால் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை என்பதை தற்பொழுது எந்த அரசியல் இயக்கங்களும் தங்கள் கோரிக்கையில் முன்வைப்பதாக இருந்து மௌனம் காக்கின்றனர்.

குறைந்தபட்சம் வாக்கு மூலம் தவறாக பதிவு செய்யப்பட்டு அந்த தவறான வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே தண்டனை பெற்ற பேரறிவாளன் கோரிக்கையை கூட மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கடந்த அதிமுக ஆட்சியிலும் தற்போதைய திமுக ஆட்சியிலும் பலமுறை முதலமைச்சர்களை சந்தித்தும் மனு கொடுத்தும் பலர் ஆதரவுடன் போராட்டம் நடத்தியும் தன் மகன் பேரறிவாளனை விடுதலை செய்ய இயலாமல் தற்போது அவரும் மௌனமாகி விட்டார்.  ஆக மொத்தத்தில் ஏழு பேரின் விடுதலை என்பது இந்திய குடியரசு தலைவர் வசம் கோப்புகள் இருப்பதினால் அந்த கோப்புகள் எப்பொ-ழுது பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. ஒரு வேளை தண்டனை பெற்றவர்கள் பேரறிவாளனை தவிர மற்றவர்களெல்லாம் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதினால் விடுதலை என்பது கானல்நீராகவே போய்விடுமோ என்ற கேள்வி தமிழர்களின் கேள்வியாகவே இருந்து வருகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் தோழமையோடு இருப்பதினால் அவர் மனது வைத்தால் மட்டுமே 7 பேர் விடுதலை என்பது சாத்தியமாகும். இல்லையேல் ஆயுள் தண்டனை காலத்தையும் தாண்டி இரட்டை ஆயுள் தண்டனையும் அனுபவித்து சா-கும்வரை சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டிய ஒரு நிலை தான் 7 பேர் விடுதலையில் இறுதி முடிவாக இருக்க முடியும்.

- டெல்லிகுருஜி