ஆப்கானிஸ்தானில் இருந்து
நாடு திரும்ப முயன்ற 150 இந்தியர்களை சிறைபிடித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் 1,200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டுக்கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் அந்த நாட்டை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். ஒவ்வொரு நகராக கைப்பற்றிய அவர்கள் இறுதியாக தலைநகர் காபூலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பரிதவித்தனர்.

தலிபான்கள் தாக்குதல்களை அதிகப்படுத்த தொடங்கியபோதே வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டன. அங்கு இருக்கும் வெளிநாட்டினரை அழைத்து வர அந்தந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்தது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்டு வருகின்றன.

காபூல் விமான நிலையத்தில் மட்டுமே அமெரிக்கா படைகள் உள்ளன. அவர்கள் அனைவரையும் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு செல்ல வேண்டாம் என்று தலிபான்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆங்காங்கே தலிபான்களுக்கும், எதிர்பார்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தானில் 1,200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டுக்கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் விமானம் அனுப்பப்பட்டது. கடந்த 15-ந் தேதி 129 பேர் அழைத்து வரப்பட்டனர். பின்னர் 2-வது விமானத்தில் 120 பேர் இந்தியாவுக்கு திரும்பினர். இதில் தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்கள் அடங்குவர். எஞ்சியுள்ள இந்தியர்களையும் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்காக இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் காபூல் விமான நிலையம் முன்பு குவிந்துள்ளனர்.

அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அங்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுபவர்களை கணக்கெடுத்து அனுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் காபூல் விமான நிலையம் அருகே 150 இந்தியர்களை தலிபான்கள் சிறைபிடித்து உள்ளனர். நள்ளிரவு 1 மணி அளவில் அவர்கள் விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது தலிபான்கள் சுற்றிவளைத்து அவர்களை சிறைபிடித்தனர்.

அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது. 150 இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவலை அங்குள்ள ஊடகங்களும், வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும் உறுதிப்படுத்தி உள்ளன. வேறுநாடுகளை சேர்ந்த சிலரும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தலிபான்கள் தரப்பில் இதுபற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை. தலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, யாரையும் கடத்தி செல்லவில்லை என்று தெரிவித்தார்.

அங்கு என்ன நிலவரம் இருக்கிறது என்பது குறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.