காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தும் திமுக குழப்பத்திற்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி!

திமுக காங்கிரஸ் கூட்டணி குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த குற்றச்சாட்டை திமுகவினர்களும் நம்புகின்ற அளவில் அகில இந்திய அளவில் பேசும் பொருளாக மாறியது. இத்தகைய சூழ்நிலையில் கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் திடீர் மரணம் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு ஏற்பட்ட சலசலப்புக்கு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது. இதற்கு ஏற்றார்போல் வசந்தகுமாரின் படத்திறப்பு விழா அஞ்சலி செலுத்தும் விழாவாக தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்று வசந்தகுமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


இதற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக எம்.கிருஷ்ணசாமி இருந்த பொழுது திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக வரலாற்றில் தோழமை கட்சிகளை தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து மட்டுமே ஆலோசனை நடத்துவார்கள் மற்ற கட்சி அலுவலகங்களுக்கு செல்வதை பெரும்பாலும் விரும்பமாட்டார்கள். இது கடந்த கால வரலாறு. அந்த வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் முறியடிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி அவர்களும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்கள் என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களின் அணுகுமுறையிடில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்த நிகழ்வு கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளியாகவும் எச்.வசந்தகுமார் படத் திறப்பு அஞ்சலி நிகழ்ச்சி அமைந்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதி என்பதற்கு அடையாளமாகவும் அமைந்துள்ளது.