திண்டிவனம் கே.இராமமூர்த்தி எக்ஸ்.எம்.பி சிந்தனை துளிகள்! பத்திரிகையாளரை தட்டிக்கேட்டார்!

திண்டிவனம் கே.இராமமூர்த்தி எக்ஸ்.எம்.பி சிந்தனை துளிகள்!


பத்திரிகையாளரை தட்டிக்கேட்டார்!


அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு


வடாற்காடு மாவட்டத்தில் பெருந்தலைவர் சுற்றுப்பயணம் செய்தார். மாவட்ட தலைவர் பலராமன் எக்ஸ்.எம்.பி., ஏற்பாடுகளை செய்திருந்தார். பயணியர் விடுதியில் தலைவர் தங்கியிருந்தார். திடீரென அவரைப் பார்ப்பதற்கு அன்றைய மாவட்ட ஆட்சியர் ராமமூர்த்தி IAS அதிகாரி என்கிற முறையில் காமராஜரை பார்க்க வந்தார். அவர் பெருந்தலைவரிடம் சில பேப்பர்களை கொடுத்து பேசிவிட்டு சென்றுவிட்டார். அன்றைய தினம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு சென்னை திரும்பினோம். வீட்டிற்கு வந்தவுடன் அவருடைய காப்பாளர் வைரவனை அழைத்து நாளை காலையில் “சிகப்பு நாடா”, கையிலை மன்னனை என்னை வந்து பார்க்கச்சொல் என்று சொன்னார். அடுத்த நாள் காலையில் கையிலை மன்னன் காமராஜிடம் வந்தார். அவரை பார்த்தவுடன் காமராஜருக்கு கோபம் வந்தது. நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய். பத்திரிகை கையில் இருந்தால் எது வேண்டுமானாலும் எழுதலாமா? ராமமூருத்தி IAS அதிகாரியைப் பற்றி உனக்கு என்ன தெரியும். மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், வீடும் விருந்தினர் விடுதியில் வேலூரில் ஒரே காம்பவுண்டுக்குள் தான் இருக்கிறது.


அங்கு அமைச்சர் என்கிற முறையில் (ப.ஊ.சண்முகம்) தங்குவதை மாவட்ட ஆட்சியர் எப்படி தடுக்க முடியும் ப.ஊ.சண்முகம் அங்கு தங்கினால் அவரையும், மாவட்ட ஆட்சியர் குடும்பத்தையும் இணைத்து தாறுமாறாக எழுதுவதா? அவர் அரசாங்க அதிகாரி, உன்னைப்போல் மேடைப்போட்டு பதில் பேச முடியுமா? அல்லது பத்திரிக்கையில் எழுத முடியுமா? இப்படியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் எழுதுவது மிகப் பெரிய தவறு இதில் வேற உங்கள் பத்திரிக்கைக்கு காமராஜரின் போர்வாள் பெயரை எடுத்துவிடு என்றார். அதற்கு பிறகு கயிலை மன்னன் மன்னிப்பு கேட்டதுடன் மன்னிப்பை பத்திரிக்கையிலும் வெளியிட்டார். அந்த பெயரையும் எடுத்துவிட்டார். திமுக ஆட்சியில் செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கும் காமராஜர் அளித்த பாதுகாப்பு எத்தகையது என்பதை இன்றைய திமுக தலைவர்களும் மற்ற எதிர்கட்சி தலைவர்களும் தெரிந்துக் கொள்வார்களா?


காமராஜர் கோபம் உறவினர் மன்னிப்பும்! காமராஜரின் கோபம் சமத்துவ சிந்தனை. வடாற்காடு மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு செஞ்சியிலிருந்து தென்னாற்காடு மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முன்னதாகவே வந்து தங்கிவிட்டார். அது நல்ல கோடைகாலம். பயணியர் விடுதியில் சிறிய ஆற்றையொட்டி அவர் படுக்கும் வரையிலும் உடன் இருந்துவிட்டு அதற்கு பிறகு வெளியே அமர்ந்து மாவட்டத்தை சார்ந்த நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தோம். திடிரென்று இரவில் காமராஜர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். என்னப்பா இப்படி புழுக்கமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தார். ஒரு கயிற்று கட்டிலை எடுத்து வெளியே போடுங்கள் என்று சொல்லி திறந்த வெளியில் படுத்துவிட்டார். படுத்த உடனே உறங்கியும் விட்டார். அவருக்கே உரியதான குறட்டை சத்தமும் பலமாக கேட்க துவங்கிவிட்டது. எங்களுக்கோ அவர் ஒரு பாதுகாப்பும் இல்லாமல் திறந்த வெளியில் படுத்துவிட்டாரே என்ற அச்சம், பயம். அப்போதெல்லாம் அங்கு எப்போதாவது குள்ள நரி நடமாட்டம் உண்டு அன்று இரவு முழுக்க கொஞ்ச இடைவெளிவிட்டு அவரை சுற்றி திறந்த வெளியில் நாங்களும் படுத்துக்கொண்டோம். அவர் சொகுசுகளை நாடியதில்லை.


சுகபோகங்களை விரும்பியதில்லை அவருடைய எளிமை திறந்தவெளியில் கயிற்று கட்டிலில் உறங்கியதிலிருந்து துவங்கியது. அடுத்த நாள் அவர் திண்டிவனம் பயணியர் விடுதியில் வந்து தங்கிவிட்டார். அவரது சுற்றுப்பயண திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே திண்டிவனத்தில் மிகப் பெரிய அரிசி வியாபாரம் செய்து கொண்டிருந்த பாக்கியராஜ் நாடார் என்னோடு பேசினார். அவர் விருதுநகரைச் சேர்ந்தவர். காமராஜருக்கு தூரத்து சொந்தம் அந்த உரிமையில் தம் வீட்டில் அவர் சாப்பிட வேண்டும் என்றார். அப்போது நான் திண்டிவனம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர். மெல்ல மெல்ல காமராஜரிடம் பாக்கியராஜ் நாடாகர் விருப்பத்தை தெரிவித்தேன். எதற்கப்பா வெளியில் சாப்பிட வேண்டும் எனக்கு பயணிகள் விடுதியிலேயே ஏற்பாடு செய்துவிடு என்றார். நான் விடாப்பிடியாக அவர் நல்ல காங்கிரஸ்காரர் அவர் எங்களுக்கு உதவி செய்பவர் அவரது வேண்டுகோளை ஏற்றவேண்டும் என்றேன். சரி ஏற்பாடு செய் என்றார் மதிய உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. முன்கூட்டியே காலஞ்சென்ற வேணுகோபால் கவுண்டர் எக்ஸ்.எம்.எல்.ஏ பொன்னப்ப நாயுடு எக்ஸ்.எம்.எல்.சி என்னுடைய தந்தை கண்ணய்ய கவுண்டர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்கள். எப்போதும் காமராஜர் மதிய உணவுக்குப் பிறகு உடனடியாக படுத்துவிடுவார். படுப்பதற்கு முன்னதாக அறையில் தனியாக உட்கார்ந்து சிகரெட் பிடிப்பார். அன்றைக்கு உணவுக்குப் பிறகு வரண்டாவில் மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்த போது என்னை அழைத்து கார் தயாரா என்றார்? அவரின் அவசரம் அதற்குள் இரண்டுமுறை கேட்டுவிட்டார். என்னால் மறைக்க முடியாமல் டிரைவர் சிவசாமி சாப்பிடுகிறார் இப்போ வந்திடுவார் என்றேன். ஏன் டிரைவர் நம்மோடு உட்கார்ந்து சாப்பிட்டால் மரியாதை போய்விடுமோ, டிரைவர் என்றால் அவ்வளவு கேவலமோ அவர்கள் பணக்காரர்கள் என்றால் அந்த பழக்கத்தை அவர்களோடு வைத்துக் கொள்ளட்டும் என்னிடம் திணிக்க வேண்டாம் சிவசாமி சாப்பிட்டுவிட்டு வரட்டும் நான் புறப்படுகிறேன் என்று கூறிக்கொண்டு எழுந்து வீதியில் நடந்து செல்ல ஆரம்பித்து விட்டார். என்னுடைய காரை நானே ஓட்டிச்சென்று அவர் எதிரே நிறுத்தினேன் பிறகு விடுதிக்கு சென்றுவிட்டார்.


மாலை 5 மணிக்கு சர்க்கரை போடாத காப்பியுடன் அவருக்காக காத்திருந்தேன். அவர் எழுந்தவுடன் என்னை அழைத்தார். அவர்களுக்கு (பாக்கியராஜ் நாடார்) என்ன தெரியும் அவர்கள் பழக்கப்படி வேலைக்காரர்கள் சமமாக உட்கார்ந்து சாப்பிடமாட்டார்கள் என்று சொல்லி முடிப்பதற்கு பாக்கியராஜ் நாடார் நேரில் வந்துவிட்டார். என்ன அது உங்கள் ஏற்ற தாழ்வுகளை என்னால் பார்க்கமுடியாது இனிவேலக்காரர்களை சமமாக நடத்துங்கள் சர். சாப்பாடு நன்றாக இருந்தது என்றார். எங்களுக்கு நல்ல பாடம் ஏற்பட்டது.