பெரிய பொருளாதார நாடாக
 இந்தியா உருவெடுக்கும் 
பிரதமர் மோடி



பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்  தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசு நேற்று வேண்டுகோள் விடுத்து இருந்தது.

ஆனால் பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் போர், டிரம்ப் கருத்து, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவை குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து அனைத்து விவாதத்துக்கும் தயார் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மோடியும் இதே கருத்தை பிரதிபலித்தார். பாராளுமன்றத்துக்கு வந்த பிரதர் மோடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

பாராளுமன்றத்தில் நடத்தப்படும் விவாதம் பயனுள்ள வகையிலும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதன் மூலம் நாட்டு மக்களுக்கு பயன் கிடைக்க வேண்டும். தற்போது செழுமையான மழைக்காலம் தொடங்கி உள்ளது. எனவே நாம் புத்துணர்ச்சியுடன் மழைக்கால கூட்டத் தொடரை தொடங்க வேண்டும். இந்த கூட்டத்தொடர் மிக மிக முக்கிய ஒன்றாகும். நாட்டை அடுத்தக் கட்டத்துக்கு கட்டி இழுப்பதற்கு இந்த கூட்டத்தொடரில் நாம் பல முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும்.

விண்வெளியில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்து உள்ளார். அவர் சர்வதேச விண்வெளி ஆய்வு தளத்தில் இந்தியாவின் கொடியை வெற்றிகரமாக பறக்க விட்டுள்ளார். இதன் மூலம் விண்வெளி துறையில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறது. அதுபோல பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் போர் நடவடிக்கை 100 சதவீதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. 22 நிமிடங்களில் பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்புகளை நாம் வெற்றிகரமாக அழித்து உள்ளோம். இது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

ஆபரேஷன் சிந்தூர் செயல்பாடுகளை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. பாகிஸ்தானில் இயங்கிய பயங்கரவாதிகளின் முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டதை நாடுகள் பாராட்டுகின்றன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் நாம் மேற்கொண்ட அணுகுமுறைகளை உலக நாடுகளுக்கு தெரிவித்து உள்ளோம். இதற்காக இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா நாளுக்கு நாள் பொருளாதாரத்தில் வலிமை பெற்று வருகிறது. தற்போது உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. மிக விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவில் நடக்கும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் உலக நாடுகளை வெகுவாக கவர்ந்துள்ளன. நிதி சார்ந்த தொழில்நுட்பத்தில் நாம் முன்னோடியாக திகழ்கிறோம். நமது யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு உள்நாட்டில் தடையாக இருக்கும் நக்சலைட்டுகள் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். விரைவில் நக்சலைட்டுகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள். தற்போது வரை நக்சலைட்டுகளின் பிடியில் இருந்து 100 மாவட்டங்களை நாங்கள் மீட்டு இருக்கிறோம். தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகள் நாட்டை மேம்படுத்தும் வகையில் அமையும். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது வேற்றுமையை  மறந்து அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

- தொ