அமித்ஷாவின் வலைதளம் பதிவிற்கு
அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி




இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, "இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நம்முடைய நாட்டின் மொழிகள், நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய மொழிகளில் இல்லையென்றால், நாம் உண்மையான இந்தியனாக இல்லாமல் போய்விடுவோம். நமது நாட்டையும், நமது கலாச்சாரத்தையும், நமது வரலாற்றையும், நமது மதத்தையும் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது" எனத் தெரிவித்தார்.

அமித் ஷாவின் இந்த பேச்சை கண்டித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, " ஆங்கிலம் அதிகாரமளிப்பது. வெட்கக்கேடானது அல்ல என தெரிவித்தார். இந்நிலையில், அமித் ஷாவின் கருத்தை விமர்சித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஆங்கிலம் இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல - அது உலகளாவிய முன்னேற்றத்திற்கான ஒரு கருவி. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதை ஒரு காலனித்துவ நினைவுச்சின்னமாக அல்ல, மாறாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கக் கற்பிக்கின்றன. வலுவான தேசிய பெருமையைக் கொண்ட சீனா கூட, வளர்ச்சிக்கு ஆங்கிலத்தை அவசியமாகக் கருதுகிறது.

ஆனால் இந்தியாவில், அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ்.-ம் ஆங்கிலத்தை மேல்தட்டு மக்களுக்கு உரியதாக சித்தரிக்க முயல்கிறார்கள். இதற்கு காரணம் ஆங்கிலம் நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அல்ல, மாறாக ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை உயர்த்துவதற்கு அதிகாரம் அளிப்பதால் இவ்வாறு கூறுகின்றனர்.

ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததைப் போலவே, இப்போதும் ஆங்கிலம் பெரும்பாலான மக்களுக்கு எட்டாதவாறு இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இது மொழியைப் பற்றியது அல்ல - இது கட்டுப்பாட்டைப் பற்றியது.

அனைவருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதில் திமுக நம்பிக்கை கொண்டுள்ளது. நமது அடையாளத்திற்காக தமிழ், வாய்ப்பிற்காக ஆங்கிலம். அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த இரண்டும் கிடைக்கின்றன. ஏனென்றால் மொழி ஒரு தடையாக அல்ல, ஒரு ஏணியாக இருக்க வேண்டும். அமித் ஷாவின் பயம் ஆங்கிலத்தைப் பற்றியது அல்ல - அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது" என்று பதிவிட்டுள்ளார்.