திமுகவுக்கு காங்கிரஸ் வைக்கும் டிமாண்ட்





வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்போம் என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக அங்கம் வகித்து வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் இக்கட்சிகள் உறுதியாக உள்ளன.

அதே சமயம் 2021 சட்டமன்றத் தேர்தலில் வழக்கத்தை விட குறைவாக மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தலா ஆறு தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு போட்டியிட்டன. கடந்த தேர்தலில் விருப்பம் இல்லாவிட்டாலும் ஆறு தொகுதிகளைப் பெற்றுக்கொண்டோம். இந்த முறை கண்டிப்பாக கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்போம் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதேபோல விசிக தலைவரும் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவோம், கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட்டணியில் நீடிப்போம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல வைகோவுக்கு மாநிலங்களவை சீட் மறுக்கப்பட்டதை காரணம் காட்டி கூடுதல் சீட் கேட்க உள்ளதாக மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் 2011 சட்டமன்றத் தேர்தலில் 63 இடங்களிலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 இடங்கள் மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் 18 இடங்களில் வென்றது. இந்த நிலையில் காங்கிரஸும் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக பேட்டியளித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார், “2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்டோம். இந்த முறை நிச்சயம் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்” என்றார். ஆட்சியில் பங்கு கேட்க வாய்ப்பு உள்ளதாக என்ற கேள்விக்கு, “காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. தமிழகத்தின் நிலையை அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது அமைச்சரவையில் பங்கு வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நிச்சயம் கோரிக்கை வைப்போம்” என்று தெரிவித்தார். முன்னதாக திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளன. இன்னும் சில கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடைபெறாத நிலையில், அமித்ஷாவின் இந்த கருத்து முக்கியமானதாக மாறியுள்ளது. ஆனால், கூட்டணி ஆட்சி என்ற கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமி இன்னும் எவ்வித பதிலையும் சொல்லவில்லை.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் தரப்பில் இருந்து அமைச்சரவையில் பங்கு என்ற குரல் எழுந்துள்ளது. முன்னதாக கூட்டணி ஆட்சி தொடர்பான தேவை இப்போது எழவில்லை என திருமாவளவன் தெரிவித்துவிட்டார். மார்க்சிஸ்ட் எப்போதும் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என அக்கட்சி தெரிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- தொகு