அழைப்பு விடுத்த அதிமுக :
திருமாவளவன் சொன்ன பதில்





திருமாவளவன் தலைமையிலான விசிக கடந்த பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ச்சியாக அங்கம் வகித்து வருகிறது. இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் நடந்த விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. ஆனால், தான் அதிமுக உள்பட மது ஒழிப்பு மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாகவே அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்தார். அத்துடன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாக திருமாவளவன் பேசுவதும் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. எனினும், அடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இடம்பெறுவோம் என்று திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக மேடையில் பதில் அளித்த திருமாவளவன், “தேர்தல் அரசியல் என்பது வேறு, மக்களுக்காக போராடுவது என்பது வேறு. மக்களோடுதான் எப்போதும் விசிக இருக்கும். இதுதான் இன்பதுரைக்கு எனது பதில். மக்கள் பிரச்னை என்றால் கட்சி அடையாளம் கடந்து மக்களோடு மக்களாக இணைந்து நிற்போம்” என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்பதுரை அழைப்பு என்பது தேர்தலுக்கான அழைப்பு கிடையாது. வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்பான அழைப்பு அது. அத்துடன், நாங்கள்தான் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோமே.. ஆகவே, எங்களுக்கு இன்னொரு கூட்டணிக்கான தேவையே எழவில்லை” என்று விளக்கம் அளித்தார். அதிமுக அழைப்பு விடுத்ததும், அதற்கு திருமாவளவன் அளித்துள்ள பதிலும் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.