அடுத்த 2 ஆண்டுகளில் அரசு பணிக்கு 50 ஆயிரம் பேர் தேர்வு: 10,205 பேருக்கு அரசு பணி ஆணையை வழங்கி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதில் 5,278 இளநிலை உதவியாளர்கள், 5339 தட்டச்சர்கள், 1077 சுருக்கெழுத்தர்கள், 425 வி.ஏ.ஓ (கிராம நிர்வாக அலுவலர்கள்) 67 வரித் தண்டலர்கள், 19 கள உதவியாளர்கள் அடங்குவார்கள். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அரசு பணி நியமன ஆணையை வழங்கிடும் விதமாக 10 பேருக்கு ஆணைகளை வழங்கினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மக்கள் சேவையை மனதில் வைத்து நீங்கள் பணியாற்ற வேண்டும். அரசு பணிக்கு தமிழ் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் அரசு பணிக்கு 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.