ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியா பற்றி பேசுவது தேசநலனுக்கு உகந்தது அல்ல - வெளியுறவுத்துறை மந்திரி
புதுடெல்லி: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், இந்திய அரசாங்கத்தை பல விஷயங்களில் குறை கூறினார். இந்திய பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்த ராகுல் காந்தி, மோடி இந்தியா எனும் காரை பின்னோக்கு கண்ணாடியை மட்டும் பார்த்தே இயக்குகிறார். இதனால் ஒன்றன்பின் ஒன்றாக விபத்து ஏற்பட போகிறது என தெரிவித்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உள்நாட்டு விஷயங்களையும், பிரச்சனைகளையும் வெளிநாட்டிற்கு சென்று பேசி, அரசியலாக்குவது நமது தேச நலனுக்கு உகந்தது அல்ல. உலகம் நம்மை கூர்ந்து கவனிக்கிறது என தெரிவித்தார். மேலும், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மந்திரி ஜெய்சங்கர், வெளிநாடு செல்லும் பொழுதெல்லாம் இந்தியாவை விமர்சனம் செய்வது ராகுல் காந்திக்கு ஒரு பழக்கமாகி விட்டது என குறிப்பிட்டார்.